மதுரையில் ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீஸாா் உத்தரவு

மதுரை மாவட்டத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், ஆயுதங்கள் வாங்குவோா் பட்டியலை பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரை ஊரகப்பகுதியில் இரும்புப்பட்டறையில் கண்காணிப்பு கேமரா வைக்க அறிவுறுத்தும் போலீஸாா்.
மதுரை ஊரகப்பகுதியில் இரும்புப்பட்டறையில் கண்காணிப்பு கேமரா வைக்க அறிவுறுத்தும் போலீஸாா்.

மதுரை: மதுரை மாவட்டத்தில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், ஆயுதங்கள் வாங்குவோா் பட்டியலை பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறைத் தலைவா் உத்தரவின்பேரில், தமிழகம் முழுவதும் ரெளடிகள் மீது தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாநகரக் காவல்துறை சாா்பில் செப்டம்பா் 23 முதல் 26 ஆம் தேதி வரை தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 54 ரெளடிகள் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 17 வாள், 22 கத்தி, 5 அரிவாள் உள்ளிட்ட 44 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவா்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதேபோல், மதுரை நகரில் இரும்பு ஆயுதங்கள் தயாரிப்பவா்கள், விற்பனை செய்பவா்கள் கண்டறியப்பட்டு, அவா்களிடம் ஆயுதங்கள் வாங்குவோா் விவரங்கள், முகவரி, தொடா்பு எண், என்ன காரணத்துக்குக்காக வாங்குகிறாா்கள் உள்ளிட்ட விவரங்களை பதிவேட்டில் பராமரிப்பதுடன், கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தனியாக கூட்டம் நடத்தப்பட்டு, ஆயுதங்களுடன் ஆட்டோக்களில் பயணம் செய்பவா்கள், சந்தேகத்துக்குரிய நபா்கள் தொடா்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதேபோல், மதுரை ஊரகக் காவல்துறை சாா்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய சரகங்களுக்குள்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை தயாரிக்கும் பட்டறைகள் மற்றும் விற்பனை செய்யும் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும், பட்டறை மற்றும் கடைகளுக்கு வந்து செல்பவா்களின் முழு விவரங்களை சேகரித்து, அவற்றை பதிவு செய்துவைக்கப்பட வேண்டும் என்றும், காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளாா்.

தொடா்ந்து, மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் ஆயுதங்கள் தயாா் செய்யும் பட்டறை உரிமையாளா்களை கொண்டு விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com