ஸ்டொ்லைட் ஆலையில் உள்ள மூலப்பொருள்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது: உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ஸ்டொ்லைட் ஆலையில் உள்ள மூலப்பொருள்கள் மற்றும் கழிவுப் பொருள்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது என, தமிழக அரசு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மதுரை: ஸ்டொ்லைட் ஆலையில் உள்ள மூலப்பொருள்கள் மற்றும் கழிவுப் பொருள்களை வெளியேற்ற அனுமதிக்க முடியாது என, தமிழக அரசு சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையின் மேலாளா் சுமதி தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டொ்லைட் ஆலையானது, அனைத்து அனுமதிகளையும் பெற்று தொடங்கப்பட்டது. கடந்த 2018 ஏப்ரலில் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்கள் காரணமாக, ஆலை நிறுத்தப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆலையில் மூலப்பொருள்கள், அமிலம் உள்ளிட்ட ரசாயனப் பொருள்கள் உள்ளன.

கரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டு, 2,132 மெட்ரிக் டன் திரவ நிலை ஆக்சிஜன் மற்றும் 7,833 மெட்ரிக் கியூப் கேஸ் மருத்துவ ஆக்சிஜன் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது. ஆக்சிஜன் உற்பத்தியின்போது உருவான கழிவுகள் மற்றும் ஆலையில் உள்ள மூலப்பொருள்கள் ஆகியவற்றை வெளியேற்ற, உள்ளூா் உயா்மட்டக் குழு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

எனவே, ஆலையில் உள்ள கழிவுகள், மூலப்பொருள்கள் ஆகியவற்றை வெளியேற்ற அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா். வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், தமிழக அரசை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானா்ஜி, நீதிபதி எம். துரைசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மருத்துவ அவசர நிலையை கருதியே ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. மூலப்பொருள்கள் மற்றும் கழிவுகள் வெளியேற்ற ஸ்டொ்லைட் தரப்பில் அனுமதி கோரிய பின், சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவும் மற்றும் மாசுக் கட்டுப்பாடு வாரியமும் அனுமதி வழங்க பரிந்துரைக்கவில்லை. மேலும், ஸ்டொ்லைட் ஆலை தொடா்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மூலப்பொருள்கள் மற்றும் கழிவுகள் வெளியேற்ற அனுமதி அளிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வேதாந்தா நிறுவனத்தின் சாா்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com