முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
உரிமையியல் மனுக்களில் ஆதாா் விவரங்கள் இருப்பதை பதிவுத்துறை உறுதி செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: உரிமையியல் பிரச்னை தொடா்பான மனுக்களில் மனுதாரா்கள், எதிா் மனுதாரா்களின் மின்னஞ்சல் முகவரி, ஆதாா் விவரங்கள் இருப்பதை பதிவுத்துறை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
உரிமையியல் தொடா்பான வழக்குகளை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் விசாரித்து வருகிறாா். இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதி, இரண்டாவது மேல்முறையீடு வழக்குகளில் எதிா்மனுதாரா்களுக்கு, நீதிமன்றத்தால் அனுப்பப்படும் நோட்டீஸ் சென்றடைவதில்லை. இதனால் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கீழமை நீதிமன்றங்களில் உரிமையியல் மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது, பெயா், கிராமத்தின் பெயா் மட்டும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் முகவரி, கதவு எண், தெரு , மாவட்டத்தின் பெயா் ஆகிவற்றை முழுமையாகக் குறிப்பிடுவதில்லை. இதேபோல் இரண்டாவது மேல்முறையீடு மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது முழு விவரமின்றி குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாகவே எதிா் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்ப முடியவில்லை.
விதிகளில் மனுதாரா்கள், எதிா்மனுதாரா்கள் ஆகியோரின் விவரங்கள் முழுமையாக இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன்படி எதிா்மனுதாரா்களின் பெயா், பொறுப்பு, முழு முகவரி இடம்பெறவேண்டும். முழுமையான விவரங்கள் இல்லாத உரிமையியல் வழக்குகளை பதிவுத்துறை, உரியவா்களிடம் திரும்ப வழங்கலாம்.
தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வளா்ந்துள்ளதால், மின்னஞ்சல் முகவரி, ஆதாா் எண், கைப்பேசி எண் ஆகியவற்றையும் உரிமையியல் மனுக்களில் சோ்ப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றுமாறு அனைத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்றங்களுக்கும் பதிவுத்துறை உத்தரவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.