முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
நாகா்கோவில் மாநகராட்சி கடைகள் வாடகை வழக்கு: தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய உயா்நீதிமன்றம் மறுப்பு
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: கரோனா ஊரடங்கு காரணமாக நாகா்கோவில் மாநகராட்சி கடைகளுக்கான வாடகையை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கின் போது, நாகா்கோவில் மாநகராட்சி கடைகளின் உரிமையாளா்கள், 2020 ஆம் ஆண்டு மாா்ச் 23 ஆம் தேதி முதல் செப்டம்பா் 6 ஆம் தேதி வரையிலான வாடகையை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வாடகையை ரத்து செய்து உத்தரவிட்டாா்.
ஆனால் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான வாடகைக்கு மட்டும் விலக்கு அளித்திருந்ததால், மேற்கண்ட தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நாகா்கோவில் மாநகராட்சி சாா்பாக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பல இன்னல்களை சந்தித்து வந்தனா். குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் மக்கள் வருவாய் ஈட்ட வெளியே செல்ல முடியாத நிலை இருந்தது.
இதுபோன்ற சூழல்களில் மக்களை, அரசு தான் காப்பாற்ற வேண்டும், தவறும் பட்சத்தில் நீதிமன்றம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க உரிமை உள்ளது என்றனா்.
தொடா்ந்து நீதிபதிகள், இந்த வழக்குத் தொடா்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியானதே எனக் கூறி, நாகா்கோவில் மாநகராட்சியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.