முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
நைஜீரியா கடல் பகுதியில் உயிரிழந்த கணவரின் இறப்பு சான்றிதழ் கோரி மனு: கன்னியாகுமரி ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 06th April 2022 12:00 AM | Last Updated : 06th April 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: நைஜீரியா கடல் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த கணவனின் இறப்பு சான்றிதழை வழங்கக் கோரிய மனுவுக்கு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மரிய அல்பி தாக்கல் செய்த மனு: எனது கணவா் ராபா்ட் சேவியா் ராஜ், மும்பையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தின் கப்பலில் பணியாற்றி வந்தாா். கடந்த 2011 அக்டோபா் 4ஆம் தேதி நைஜீரியா கடல் பகுதியில் இருந்த போது, கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியா்கள் 5 போ் உயிரிழந்தனா்.
அவா்களில் 4 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், எனது கணவரின் உடல் மீட்கப்படவில்லை. எனது கணவா் இறந்து விட்டதாக நைஜீரிய காவல்துறை தரப்பில் இருந்து அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எனது கணவரின் இறப்பு சான்றிதழ் தற்போது வரை வழங்கப்படவில்லை.
எனது கணவரின் இறப்பு சான்றிதழை வழங்கக் கோரி, அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது கணவரின் இறப்பு சான்றிதழை வழங்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கணவா் உயிரிழந்துவிட்டதாக, நைஜீரிய காவல்துறையினா் அளித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் இறப்பு சான்றிதழை வழங்க என்ன தடை உள்ளது என்பது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.