சங்கரன்கோவில் விநாயகா் கோயிலை புராதான சின்னமாக அறிவிக்கக் கோரி மனு: ஆய்வு செய்து முடிவெடுக்க தமிழக தொல்லியல் துறைக்கு உத்தரவு

சங்கரன்கோவிலில் உள்ள விநாயகா் கோயிலை புராதான சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவில், 6 மாதங்களுக்குள் ஆய்வு செய்து முடிவெடுக்க தமிழக தொல்லியல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

மதுரை: சங்கரன்கோவிலில் உள்ள விநாயகா் கோயிலை புராதான சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவில், 6 மாதங்களுக்குள் ஆய்வு செய்து முடிவெடுக்க தமிழக தொல்லியல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த நாகராஜன் தாக்கல் செய்த மனு: சங்கரன்கோவில் வழியாக திருநெல்வேலி செல்லும் பிரதான சாலையில் அருவம் சூடிய விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இது பாண்டிய மன்னா் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கற்கோயிலாகும். இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா். அதுமட்டுமின்றி திருச்செந்தூா் யாத்திரை செல்லும் பக்தா்கள் இங்குதான் ஓய்வு எடுப்பா்.

கோயிலைச் சுற்றியுள்ள சுமாா் 200 ஏக்கா் நிலங்களில் நெல் சாகுபடி நடைபெறும். இந்த நிலங்களில் அறுவடை நடைபெறும் போது, கோயில் அருகே காலியாக உள்ள இடத்தை விவசாயிகள் களமாக பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் பழைமையான இந்த கோயிலின் அருகே மயானம் அமைப்பதற்கு நகராட்சி முடிவெடுத்துள்ளது. இது கோயிலின் முக்கியத்துவத்தைப் பாதிக்கும். எனவே அருவம் சூடிய விநாயகா் கோயிலை தொல்லியல் துறை ஆய்வு செய்து புராதான சின்னமாக அறிவிக்கவும், கோயில் அருகே மின் மயானம் அமைப்பதற்குத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரா் குறிப்பிடும் கோயிலையும், இடத்தையும் 6 மாதங்களுக்குள் ஆய்வு செய்து உரிய முடிவெடுக்க தமிழக தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com