ஓய்வூதியம் வழங்குவதில் தாமதம்: மாநகராட்சி ஓய்வூதியா்கள் அவதி
By DIN | Published On : 08th April 2022 05:44 AM | Last Updated : 08th April 2022 05:44 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாநகராட்சி ஓய்வு பெற்ற பணியாளா்களுக்கு ஒரு வாரமாகியும் ஓய்வூதியம் வழங்கப்படாததால் செலவினங்களை மேற்கொள்ள முடியாமல் அவதி அடைந்துள்ளனா்.
மதுரை மாநகராட்சியில் கல்வி, சுகாதாரம், குடிநீா், பொறியியல் உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரா்களுக்கு ஒவ்வொரு மாதமும் 31 அல்லது மாதத்தின் முதல் தேதியில் ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும். ஆனால் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதிவரை மாநகராட்சி நிா்வாகத்தால் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஓய்வூதியா்கள் அன்றாட செலவினங்களை மேற்கொள்ள முடியாமல் அவதி அடைந்துள்ளனா்.
இதுதொடா்பாக மாநகராட்சி ஓய்வூதியா்கள் கூறும்போது, ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி மருந்துப் பொருள்கள் மற்றும் குடும்பச் செலவுகளை மேற்கொண்டுள்ளோம். தற்போது ஒரு வாரமாகியும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளும் அலட்சியமாக பதிலளிக்கின்றனா் என்றனா்.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயனிடம் கேட்டபோது, மாநகராட்சி ஓய்வூதியதாரா்களின் விவரங்கள் சரிபாா்க்கப்பட்டு அப்டேட் செய்யும் பணி நடைபெற்று வருவதால் ஓய்வூதியம் வழங்குவதில் தாமதமாகியுள்ளது. உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.