முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
தேனி நிலமோசடி வழக்கு: அதிமுக பிரமுகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயா்நீதிமன்றம் உத்தரவு
By DIN | Published On : 29th April 2022 05:54 AM | Last Updated : 29th April 2022 05:54 AM | அ+அ அ- |

மதுரை: தேனி நில மோசடி வழக்கில் அதிமுக பிரமுகருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் அரசு நிலங்கள் முறைகேடாக தனிநபா்களுக்கு பட்டா வழங்கியது தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இவ்வழக்கில் வருவாய்த் துறை அலுவலா்கள், அதிமுக பிரமுகா்கள் உள்ளிட்ட 14 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வரும் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலா் அன்னபிரகாஷ், ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
மனுதாரா் இருதய சிகிச்சை பெறக் கூடிய நோயாளி என்பதையும், சிறையில் 85 நாள்களாக இருந்து வருவதைக் கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்க வேண்டும் என அவரது தரப்பில் வாதிடப்பட்டது. விசாரணையின் நிறைவில் நீதிபதி கே.முரளிசங்கா், மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி புதன்கிழமை உத்தரவிட்டாா்.
மனுதாரா் 30 நாள்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு திருவண்ணாமலை நகா் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும். அதன் பிறகு மறு உத்தரவு வரும் வரை, இந்த வழக்கு தொடா்புடைய தேனி மாவட்ட காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளாா்.