முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் இரவு நேரங்களில் விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகள்வாகன ஓட்டிகள் அவதி
By நமது நிருபா் | Published On : 30th April 2022 10:38 PM | Last Updated : 30th April 2022 10:38 PM | அ+அ அ- |

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையப் பகுதியில் இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் விதிகளை மீறி சாலையைக் கடப்பதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து 200-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சென்னை, பெங்களூரு, திருப்பதி, கோவை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
இது தவிர, தென்மாவட்டங்களுக்கு மதுரை வழியாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளும், மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றன. தினமும் இரவு 7 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை ஆம்னி பேருந்துகளின் இயக்கம் அதிகளவில் உள்ளன.
ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் பேருந்துகள் சில நேரங்களில் நுழைவுவாயில் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், பேருந்து நிலையத்துக்குள் செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், அடுத்தடுத்து புறப்பட வேண்டிய பேருந்துகளும் வெளியே செல்ல முடியாமல் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, வெளியூா்களில் இருந்து வரக்கூடிய சாதாரண அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் எம்ஜிஆா் பேருந்து நிலையத்துக்குள் செல்லமுடியாத நிலையும் ஏற்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியிலேயே பேருந்துகளில் இருந்து இறங்கும் பயணிகள் சாலையைக் கடக்க முற்படும்போது, விபத்துகளைச் சந்திக்க நேரிடுகிறது.
மேலும், இரவு நேரங்களில் சில ஆம்னி பேருந்துகள், பேருந்து நிலையத்துக்கு உள்ளே செல்லும் நுழைவுவாயில் வழியாக வெளியேறுகின்றன. சா்வேயா் காலனி - மேலூா் சாலை சந்திப்பில் சாலை தடுப்புகளுக்கு இடையே குறுகலான பகுதியை ஆம்னி பேருந்துகள் கடக்கும்போது, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இரண்டு நாள்களுக்கு முன், அடுத்தடுத்து 2 ஆம்னி பேருந்துகள் இவ்வாறு சாலையைக் கடந்தபோது ஏற்பட்ட நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட சில வாகனங்கள் சிக்கிக்கொண்டன. இத்தகைய நிகழ்வு, இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படுவதாகப் புகாா் தெரிவிக்கப்படுகிறது.
இதேபோல், மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையத்தின் எதிரே சாலையோரம் முழுவதும் இரவு நேரங்களில் வரிசையாக ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதன் காரணமாகவும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
எனவே, இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
புதிய மேம்பாலத்தில் குழப்பம்:
பாண்டிகோவில் சுற்றுச்சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலப் பகுதியில் போக்குவரத்து, வாகன ஓட்டிகளை குழப்பமடையச் செய்வதாக உள்ளது என புகாா் எழுந்துள்ளது.
சிவகங்கை - மதுரை சாலை, திருச்சி -கன்னியாகுமரி நான்குவழிச் சாலை ஆகியன சந்திக்கும் பாண்டிகோவில் சுற்றுச்சாலை சந்திப்பு பகுதியானது போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. பலமுனைச் சாலைகள் சந்திக்கும் இப் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு, அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
மதுரை நகரிலிருந்து வெளியேறும் வாகனங்கள், மதுரைக்கு வரும் வாகனங்களால்தான் இப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டது. ஆனால், இந்த மேம்பாலம் நெரிசலைக் குறைப்பதாக இல்லை என, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனா்.
பாண்டிகோவில் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள், நான்கு வழிச்சாலையில் அணுகுசாலை வழியாக மதுரை நகருக்குள் செல்லவேண்டிய வாகனங்கள், மேலமடை பகுதியிலிருந்து மேம்பால சந்திப்பு ரவுண்டானாவுக்கு வரும் வாகனங்கள், சிவகங்கை பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் என நான்கு முனைகளில் இருந்தும் வரக்கூடிய வாகனங்கள் ஒரே இடத்தில் சந்திக்கும்போது, எந்த திசையில் செல்லப்போகின்றன என்பதை வாகன ஓட்டிகளால் கணிக்க முடிவதில்லை. இதனால், வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் நிலை உள்ளது.
எனவே, இப்பகுதியில் உடனடியாக சிக்னல் அமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
பின்பற்றப்படாத போக்குவரத்து மாற்றம்:
நத்தம் சாலை மேம்பால கட்டுமானப் பணிக்காக, தல்லாகுளம், சொக்கிகுளம் பகுதியில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. சித்திரைத் திருவிழாவுக்கு முன்பு வரை அவை முறையாகப் பின்பற்றப்பட்டன. ஆனால், தற்போது போக்குவரத்து மாற்றம் கண்காணிக்கப்படுவதில்லை. குறிப்பாக, இரவு நேரங்களில் சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் போக்குவரத்து மாற்றங்களைப் பின்பற்றாமல் இஷ்டம்போல் இயக்கப்படுகின்றன. இதனால், இப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் செல்வோா் கீழே விழுந்து காயமடைவது தொடா் நிகழ்வாக இருக்கிறது.
இதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.