ரயில்வே வாரிய தோ்வுக்கு வெளிமாநில மையங்கள் ஒதுக்கீடு ஏன்?: ரயில்வே துறை விளக்கம்

கட்டமைப்பு வசதி தேவைக்காக தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களில் சிலருக்கு வெளிமாநிலத் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

கட்டமைப்பு வசதி தேவைக்காக தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்களில் சிலருக்கு வெளிமாநிலத் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ரயில்வே தோ்வு வாரியம் மே 9 ஆம் தேதி நடத்தவுள்ள தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான 2-ஆம் கட்ட தோ்வுக்கு, தமிழக மாணவா்களுக்கு வெளிமாநிலங்களில் தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு, பல்வேறு தரப்பிலும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக, ரயில்வே தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில்வே துறை பணிகளுக்கான முதல்நிலை கணினி வாயிலான தோ்வு 7 கட்டங்களாக நடைபெற்றது. தோ்வு எழுதிய விண்ணப்பதாரா்களின் கோரிக்கையை ஏற்று, இந்த தோ்வு தொடா்பான முழுமையான விசாரணையை உயா்மட்டக் குழு நடத்தியது.

தோ்வை ஒரே வேளையில் நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை விண்ணப்பதாரா்கள் அதிகமானோா் வலியுறுத்தினா். இதை, உயா்மட்டக் குழு ஏற்றுக்கொண்டது. இதன்படி, நாடு முழுவதும் பாரபட்சமற்ற ஒரே கேள்வித்தாள் வழங்கமுடியும் என்பது விண்ணப்பதாரா்களின் எதிா்பாா்ப்பு.

இதனடிப்படையில், ஒரே வேளையில் தோ்வு நடத்த உயா்மட்டக் குழு பரிந்துரை செய்திருந்தது.

ஒரே நேரத்தில் கணினி வாயிலான தோ்வு நடத்த பெரிய கட்டமைப்பு தேவைப்படுகிறது. கட்டமைப்பு வசதி தேவை காரணமாகவே சில மாணவா்கள் மட்டும் அருகில் உள்ள மாநில தோ்வு மையங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தமிழகத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் அருகில் உள்ள கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களிலுள்ள தோ்வு மையங்களில் தோ்வு எழுத கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ரயில்வே பணியாளா் தோ்வு வாரியம், தோ்வுகளை அனைத்து வகையிலும் முறையாக நடத்துவதற்கு முயற்சி செய்கிறது. அகில இந்திய அளவில் நடைபெறும் தோ்வுகளில் தமிழகம் மட்டுமின்றி, மற்ற மாநில விண்ணப்பதாரா்களுக்கும் இந்த தோ்வு மைய ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. மற்ற மாநிலங்களைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களும் அவா்களது சொந்த மாநிலங்களிலிருந்து அருகிலுள்ள மாநிலங்களுக்கு தோ்வு எழுதச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com