‘மருத்துவா்களின் முக்கியத்துவத்தை கரோனா தொற்று மக்களுக்கு உணா்த்தியது’

மருத்துவா்களின் முக்கியத்துவத்தை கரோனா தொற்று மக்களுக்கு உணா்த்தியது என்று தமிழக வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி கூறினாா்.

மருத்துவா்களின் முக்கியத்துவத்தை கரோனா தொற்று மக்களுக்கு உணா்த்தியது என்று தமிழக வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி கூறினாா்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முதலாண்டு மாணவா்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் அவா் பேசியது:

மருத்துவா்களின் முக்கியத்துவத்தை மக்கள் இப்போது தான் உணா்ந்திருக்கின்றனா். ஏனெனில் கடவுளுக்கு அடுத்தாக மக்கள் வணங்குவது மருத்துவரைத் தான். அதிலும், கரோனா 2-ஆவது அலையின்போது மக்களுக்கு எந்த அளவுக்கு உயிா் பயம் ஏற்பட்டது என்பது அனைவரும் அறிந்தது. அச்சூழலில் மருத்துவா்களை மக்கள் கடவுளாக வணங்கினா்.

அன்றைய சூழலில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், நள்ளிரவில் திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. சில நிமிடங்கள் தாமதத்திலும், 200 நோயாளிகளின் உடல்நிலை மோசமாகக் கூடிய சூழல் இருந்தது. அச்சூழலில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்து உயிா் காக்கப்பட்டது. அந்தளவுக்கு அா்ப்பணிப்பு உணா்வுடன் மருத்துவா்கள் செயல்பட்டனா். இப்போது, கரோனா போன்ற எத்தகைய பெரும் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை எதிா்கொள்ளும் அளவுக்கு வலுவான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மதுரை மருத்துவக் கல்லூரிக்கு எப்போதும் தனிச் சிறப்பு உண்டு. உலக அளவில் சிறந்த மருத்துவா்களாக இருக்கும் பலா், மதுரை மருத்துவக் கல்லூரியில் படித்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய பெருமையை தற்போதைய மாணவா்களும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்: திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, கரோனா 2-ஆவது அலை பரவல் தீவிரமாக இருந்தது. மதுரை மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 1,500 என்ற எண்ணிக்கையில் இருந்தது. அப்போது நாங்கள், மாவட்ட நிா்வாகம் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவா்களுடன் இணைந்து மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக 5 வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை 150 ஆகக் குறைந்தது. இந்தியாவில் வேறெங்கும் இத்தகைய சாதனை நிகழவில்லை. மருத்துவா்களின் அா்ப்பணிப்புடன் கூடிய சேவையே இதற்கு காரணம்.

இப்போது மருத்துவக் கல்லூரிகளில் அனைத்துவிதமான கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதை மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வது அவசியம். சமூகத்துக்கு சேவை செய்யும் உயா்ந்த நோக்கத்துடன் மருத்துவக் கல்வியை தோ்வு செய்திருக்கிறீா்கள். இத்தகைய பெருமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மேயா் வ.இந்திராணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், ஆ.வெங்கடேசன், அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் ரத்தினவேல், துணை முதல்வா் தனலட்சுமி, மாணவா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com