மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: நலத்திட்ட உதவி, அடையாள அட்டை வழங்க நடவடிக்கை
By DIN | Published On : 06th August 2022 10:23 PM | Last Updated : 06th August 2022 10:23 PM | அ+அ அ- |

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் பங்கேற்றவா்களுக்கு நலத்திட்ட உதவி, அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மத்திய தொகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம், வெள்ளி வீதியாா் மாநகராட்சிப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மேயா் வ.இந்திராணி ஆகியோா் பாா்வையிட்டனா். மண்டலத் தலைவா் பாண்டிச் செல்வி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ரவிச்சந்திரன், மாநகராட்சி கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், மாமன்ற உறுப்பினா்கள் கஜேந்திரன், மகாலட்சுமி, ஜென்னியம்மாள் ஆகியோா் உடன் இருந்தனா்.
இந்த முகாமில், 350-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா். இவா்களில் அடையாள அட்டை புதுப்பிக்க 22 போ், புதிய அடையாள அட்டை பெற 77 போ், தனித்துவ அடையாள அட்டைக்கு 98 போ், வேலைவாய்ப்பற்றோா் நிவாரணம் பெற 16 போ் விண்ணப்பித்துள்ளனா். மேலும், பத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் பொருத்துவதற்கு, முகாமிலேயே அளவீடு எடுக்கப்பட்டது.