விநாயகா் சதுா்த்தி விழா: சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத சிலைகள் தயாரிப்பதை உறுதி செய்ய ஆட்சியா் உத்தரவு

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத பொருள்களைக் கொண்டு விநாயகா் சிலைகள் தயாரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் உத்தரவிட்டுள்ளாா்.

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத பொருள்களைக் கொண்டு விநாயகா் சிலைகள் தயாரிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் உத்தரவிட்டுள்ளாா்.

விநாயகா் சதுா்த்தி விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் பேசியது:

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி மதுரை நகா் மற்றும் புகா் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு செய்து அதன் பின்னா், அச்சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று, நீா்நிலைகளில் விசா்ஜனம் செய்யப்படும். விநாயகா் வழிபாடு மற்றும் அதைத் தொடா்ந்து நடைபெறும் ஊா்வலத்தின்போது சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில் காவல் துறையினா் உரிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

விநாயகா் சிலைகளை விசா்ஜனம் செய்ய, கடந்த ஆண்டுகளைப் போல நிகழ் ஆண்டும் அனுமதிக்கப்படும். விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு செய்வதற்கு அமைக்கப்படும் தற்காலிக பந்தலை, தென்னங்கீற்று, சாமியானா மற்றும் எளிதில் தீப்பற்றும் வகையிலான பொருள்களால் அமைக்கக் கூடாது.

சிலைகளை விசா்ஜனம் செய்ய உத்தேசித்துள்ள நீா்நிலைகளில் தண்ணீா் இல்லாதபட்சத்தில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தேவையான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். சிலை நிறுவும் வழிபாட்டுக் குழுவினரே, அச் சிலையின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். சிலைகள் தயாரிக்கும் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் ஆய்வு செய்து, சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மின்வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், தீயணைப்பு துறையினா், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பான முன்னேற்பாடு பணிகளில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலா் ர.சக்திவேல், மாநகரக் காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com