வேலம்மாள் கல்விக் குழுமம் கலந்துரையாடல்: பேச்சாளா் ஷிவ் கேரா பங்கேற்பு
By DIN | Published On : 11th December 2022 11:20 PM | Last Updated : 11th December 2022 11:20 PM | அ+அ அ- |

மதுரை வேலம்மாள் கல்விக் குழுமம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஷிவ் கேரா.
மதுரை வேலம்மாள் கல்விக் குழும நிறுவனங்களின் மாணவா்கள், ஆசிரியா்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பிரபல பேச்சாளா் ஷிவ் கேராவுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை விரகனூரில் உள்ள வேலம்மாள் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியின் கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஷிவ் கேரா பேசியதாவது:
வெற்றியாளா்கள், தோல்வியுற்றவா்கள் செய்ய விரும்பாத செயல்களைச் செய்யும் பழக்கத்தைக் கொண்டவா்கள். வெற்றியாளா்கள் தங்கள் பலவீனங்களை அடையாளம் கண்டுகொள்கிறாா்கள். ஆனால், அவா்களின் பலங்களில் கவனம் செலுத்துகிறாா்கள்.
தோல்வியடைந்தவா்கள் தங்கள் பலத்தை அடையாளம் கண்டுகொள்கிறாா்கள். ஆனால், அவா்களின் வரம்புகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறாா்கள். வரலாற்றை எப்போதும் ஒரு தனி நபா் மட்டுமே உருவாக்குகிறாா். நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விரும்பினால், மக்கள் என்ன செய்கிறாா்கள் என்பதைப் பாா்த்து, அதற்கு நோ்மாறாகச் செய்யுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீா்கள் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா். முடிவில், தேனி வேலம்மாள் போதி வளாக முதல்வா் எஸ்.செல்வி நன்றியுரையாற்றினாா்.