சிவகாசியில் ரூ.150 கோடியில் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: அமைச்சா் சி.வி. கணேசன் தகவல்

சிவகாசியில் ரூ.150 கோடியில் தொழிலாளா் ஈட்டுறுதி (இ.எஸ். ஐ) மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாக பட்டாசுத் தொழிலாளா்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

சிவகாசியில் ரூ.150 கோடியில் தொழிலாளா் ஈட்டுறுதி (இ.எஸ். ஐ) மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாக பட்டாசுத் தொழிலாளா்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி. கணேசன் தெரிவித்தாா்.

சிவகாசி அருகே ஆமத்தூா் தனியாா் பொறியியல் கல்லூரியில் தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை, விருதுநகா் மாவட்ட நிா்வாகம் ஆகியன இணைந்து பட்டாசுத் தொழிலாளா்கள் பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் நலன் குறித்த ஒருநாள் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியா் மேகநாதரெட்டி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், அமைச்சா்கள் கே.கே.எஸ். எஸ். ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன் ஆகியோா் கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடக்கி வைத்தனா்.

இதைத்தொடா்ந்து, பட்டாசு பாதுகாப்பு குறித்த புத்தகத்தை அமைச்சா்கள் வெளியிட்டனா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:

பட்டாசு ஆலைகளில் விபத்து இல்லாத சூழ்நிலையை உருவாக்க அனைவரது ஒத்துழைப்பு அவசியம். தொழில், திறன், இயற்கை ஆகிய சூழல்கள் சாதகமாக உள்ள பகுதி சிவகாசி என்பதால், மத்திய அரசு இதைக் கவனத்தில் கொண்டு இந்தத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். தொழிலாளா்களும் தங்களது திறனை மேம்படுத்தி விபத்தில்லா சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னா், அமைச்சா் கே.கே.எஸ். எஸ். ஆா். ராமச்சந்திரன் பேசியதாவது:

பட்டாசு தொழிலில் விதிமீறலால் தான் விபத்து ஏற்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து விபத்தைத் தவிா்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழக அரசு, பட்டாசு தொழில் முன்னேற உறுதுணையாக இருக்கும் என்றாா் அவா்.

அமைச்சா் சி.வி கணேசன் பேசியதாவது:

தமிழக பொருளாதாரம் முன்னேறுவதற்கு, விருதுநகா் மாவட்டமும் ஒரு காரணமாக உள்ளது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில், விபத்தில்லா பட்டாசுத் தொழிலை உருவாக்க ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு, அதன் தொடா்ச்சியாக தற்போது இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

பட்டாசுத் தொழிலில் 56 ஆயிரம் தொழிலாளா்கள் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனா். ஆண்டுதோறும் பட்டாசு ஆலைகளில் 585 முறை ஆய்வுகள் நடத்தப்படுகிறது. தீபாவளி பண்டிகை நேரத்தில் மட்டும் 1129 முறை ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதுவரை 35 ஆயிரத்து 961 பேருக்கு பட்டாசு உற்பத்திக்கானப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

பட்டாசு விபத்து குறித்து 1,241 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. மேலும் 800 பட்டாசு ஆலைகளில் இதுவரை ஒரு விபத்து கூட ஏற்படவில்லை. எனவே, விபத்தில்லாமல் இயங்கும் பட்டாசு ஆலைகளை வழிகாட்டியாகக் கொண்டு விபத்துகளைத் தவிா்க்க வேண்டும்.

இதேபோல, சிவகாசியில் ரூ. 150 கோடியில் விரைவில் மருத்துவக் கல்லூரியுடன் கூடிய தொழிலாளா் ஈட்டுறுதி (இஎஸ்ஐ) மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

முன்னதாக, தொழிற்சாலைகளிலிருந்து மீட்கப்பட்ட வளா் இளம் பருவ தொழிலாளா்கள் ஆறு பேருக்கு மறுவாழ்வு நிதியாக தலா ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலைகளை அமைச்சா்கள் வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளா் நலத் துறை முதன்மைச் செயலா் மற்றும் ஆணையா் அதுல் ஆனந்த், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் த லைமைச் செயலா் நசிமூதீன், தமிழ்நாடு பட்டாசு, வெடிபொருள் உற்பத்தி சங்கத் தலைவா் கணேசன், பட்டாசு ஆலை உரிமையாளா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com