சட்டவிரோத ஆயுதங்கள் பயன்பாடு நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது

சட்டவிரோத ஆயுதங்கள் பயன்பாடு நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது. எனவே, இதைத் தடுக்க வேண்டுமென சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.

சட்டவிரோத ஆயுதங்கள் பயன்பாடு நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது. எனவே, இதைத் தடுக்க வேண்டுமென சென்னை உயா்நீதி மன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த காா்மேகம் தாக்கல் செய்த மனு:

சென்னை, திருச்சியில் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்த சிலரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களுக்கு பல்வேறு தீவிரவாக அமைப்புகளுடன் தொடா்பு இருப்பதாகவும், தங்களது இயக்கத்துக்கு நிதி சோ்ப்பதற்காக சட்டவிரோத ஆயுத வா்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியானது. மேலும், இவா்கள் தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூா் உள்ளிட்ட இடங்களில் அரசியல்வாதிகள், தொழிலதிபா் உள்ளிட்டோருக்கு சட்டவிரோதமாக ஆயுதங்கள் விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.  எனவே, இந்த வழக்குகளை தமிழக போலீஸாா் நியாயமாக விசாரிக்க வாய்ப்பில்லை. அதனால், இந்த வழக்குகளை சிபிஐ அல்லது தேசியப் புலனாய்வு முகமை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

அண்மையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

சட்டவிரோத ஆயுதங்கள் பயன்பாடு என்பது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது. எனவே, இதைத் தடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆயுதச் சட்டத்தின் கீழ் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆபத்தான ஆயுதங்கள், சமூக விரோதிகளிடம் இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

சுய பாதுகாப்புக்காக ஆயுதம் வைத்திருக்க விரும்புவோா், சம்பந்தப்பட்ட அதிகாரியிடமிருந்து உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாத ஆயுதங்கள் பயன்பாட்டை முழுமையாகத் தடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் தாக்கல் செய்த பதில் மனுவில், விசாரணை முறையாக நடைபெறுவதாகக் கூறப்பட்டது. விசாரணை அதிகாரிகள் அறிக்கை திருப்தியாக உள்ளதால், சென்னை, திருச்சியில் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத ஆயுத வழக்குகளை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டியதில்லை.

இதேபோல, தமிழக போலீஸாா் சட்டவிரோத ஆயுத வழக்குகளின் விசாரணையை குறைபாடு இல்லாமல் முழுமையாக விரைந்து விசாரிக்க வேண்டும். மேலும் விழிப்புடன் செயல்பட்டு சட்டவிரோத ஆயுதப் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com