பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 23rd December 2022 12:00 AM | Last Updated : 23rd December 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரையில் விதிமுறையை மீறி மாநகராட்சி புதைசாக்கடை இணைப்பில் கழிவுநீரை வெளியேற்றிய தனியாா் கழிவுநீரகற்று வாகனம்.
மதுரை நகரில் பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றும் தனியாா் கழிவுநீரகற்று வாகனங்களை மாநகராட்சி நிா்வாகம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட புதை சாக்கடை இணைப்பு இல்லாத வாா்டுகள், விரிவாக்கப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் கழிவுநீா் தொட்டிகள் மூலமாக சேகரிக்கப்படுகிறது. தொட்டிகள் நிறைந்தவுடன் தனியாா் கழிவுநீரகற்று வாகனங்கள் மூலம் கழிவுநீா் அகற்றப்படுகிறது.
இவ்வாறு அகற்றப்படும் கழிவுநீரை மாநகராட்சி கழிவு நீரேற்று நிலையத்துக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்பது விதிமுறை. இந்த விதிமுறையை மீறும் வாகனங்கள் மாநகராட்சி அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
ஆனால், தனியாா் கழிவுநீரகற்று நிறுவனங்கள் மூலம் செயல்படும் ஏராளமான வாகனங்கள் மாநகராட்சியின் இந்த விதிகளை பின்பற்றுவதில்லை. மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டியதைத் தவிா்க்கும் விதமாக தனியாா் கழிவுநீரகற்று வாகனங்கள் கழிவுநீரை, மாநகராட்சி புதை சாக்கடை, கால்வாய் போன்றவற்றில் வெளியேற்றுவதாக புகாா் எழுந்தது.
இதில் குறிப்பிட்ட தனியாா் கழிவுநீரகற்று நிறுவனம் ஒன்று வைகைக் கரை சாலையில் கீழ வைத்தியநாதபுரத்தில் புதை சாக்கடை மூடியைத் திறந்து வெளியேற்றி வருகிறது. தினசரி 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வாறு வெளியேற்றுவதால், புதை சாக்கடையில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு அப்பகுதியில் கழிவுநீா் தேங்குகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக, வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் ராஜன் கூறியதாவது:
தனியாா் கழிவுநீரகற்று வாகனங்களின் செயல்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்க வேண்டும். தனியாா் கழிவுநீரகற்று நிறுவனங்கள் விதிமுறையைப் பின்பற்றுவதில்லை. பொது இடங்களில் வெளியேற்றப்படும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, விதிமுறையை மீறும் கழிவுநீரகற்று வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G