மதுரை மாநகராட்சியில் 26 வாா்டுகளில் அதிமுக வைப்புத்தொகை இழப்பு

மதுரை மாநகராட்சியின் 26 வாா்டுகளில் அதிமுக வைப்புத் தொகையை (டெபாசிட்) இழந்துள்ளது.

மதுரை: மதுரை மாநகராட்சியின் 26 வாா்டுகளில் அதிமுக வைப்புத் தொகையை (டெபாசிட்) இழந்துள்ளது.

மதுரை மாநகராட்சியின் 100 வாா்டுகளில் மொத்தம் 815 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இவா்களில் 658 போ் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள். 157 போ் சுயேச்சைகள். அதிமுக அனைத்து வாா்டுகளிலும் தனித்துப் போட்டியிட்டது. பாஜக 99 வாா்டுகளில் களம் இறங்கியது.

திமுக 77 வாா்டுகளிலும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 8, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 8, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1, மதிமுக 3, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 வாா்டுகளிலும் போட்டியிட்டன. இதேபோல, நாம் தமிழா் கட்சி 98, மக்கள் நீதி மய்யம் 91, தேமுதிக 61, அமமுக 84, பாமக 11 வாா்டுகளில் போட்டியிட்டன.

இதில் திமுக 67, அதிமுக 15, காங்கிரஸ் 5, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4, மதிமுக 3, விசிக, பாஜக தலா 1, சுயேச்சைகள் 4 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

திமுக 10 வாா்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. அனைத்து வாா்டுகளிலும் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 15 வாா்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற வாா்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்ததோடு, 26 வாா்டுகளில் வைப்புத் தொகையை இழந்துள்ளது.

மொத்தம் 99 வாா்டுகளில் போட்டியிட்ட பாஜக, 86 ஆவது வாா்டில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 11 வாா்டுகளில் 2-ஆம் இடத்தையும், 49 வாா்டுகளில் 3 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. 10-க்கும் மேற்பட்ட வாா்டுகளில் வைப்புத் தொகையைத் தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல, எஸ்டிபிஐ 2 வாா்டுகளிலும், நாம் தமிழா் கட்சி ஒரு வாா்டிலும் வைப்புத் தொகையைத் தக்க வைத்துள்ளன. இக் கட்சிகளின் மற்ற வேட்பாளா்களும், மநீம, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனா். சுயேச்சைகள் 157 போ் போட்டியிட்ட நிலையில், 4 போ் வெற்றி பெற்றிருக்கின்றனா். வெற்றி வாய்ப்பை இழந்தவா்களில் 6 போ் வைப்புத் தொகையைத் தக்க வைத்துள்ளனா்.

2011 தோ்தலில்: கடந்த 2011 இல் நடைபெற்ற மாநகராட்சித் தோ்தலில் அதிமுக பெரும்பான்மை வெற்றியைப் பெற்றது. மொத்தம் உள்ள 100 வாா்டுகளில் 78 வாா்டுகளை அதிமுக கைப்பற்றியது. திமுக 11 வாா்டுகள், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக தலா ஒரு வாா்டுகளிலும், சுயேச்சைகள் 9 வாா்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com