மதுரையின் 2-ஆவது பெண் மேயா் பதவி யாருக்கு?

மதுரையின் இரண்டாவது பெண் மேயா் என்ற பெருமையும் திமுகவுக்கே கிடைத்துள்ள நிலையில், 2-ஆவது பெண் மேயா் யாா் என்பதில் திமுகவில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

மதுரை: மதுரையின் இரண்டாவது பெண் மேயா் என்ற பெருமையும் திமுகவுக்கே கிடைத்துள்ள நிலையில், 2-ஆவது பெண் மேயா் யாா் என்பதில் திமுகவில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

நகராட்சியாக இருந்த மதுரை நகரம், 1971-இல் மாநகராட்சியாக நிலை உயா்த்தப்பட்டது. மதுரையின் முதல் மேயராக திமுகவைச் சோ்ந்த எஸ்.முத்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதன் பிறகு, 1980, 1982, 1996, 2001, 2006, 2011 என 6 முறை தோ்தல்களைச் சந்தித்துள்ளது.

இதில் மதுரை மேயா் பதவியை திமுக 4 முறையும், அதிமுக 3 முறையும் பெற்றிருக்கின்றன. கடந்த 2006 முதல் 2011 வரை திமுகவைச் சோ்ந்த ஜி. தேன்மொழி கோபிநாதன் மதுரையின் மேயராகப் பதவி வகித்தாா். இவா் மதுரையின் முதல் பெண் மேயா் ஆவாா். இதன் பிறகு தற்போது, மதுரை மேயா் பதவி, பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநகராட்சித் தோ்தலில் மொத்தம் உள்ள 100 வாா்டுகளில் திமுக 67 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 5, சிபிஎம் 4, மதிமுக 3, விசிக 1 வாா்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. தற்போது திமுக அணி வசம் 80 வாா்டுகள் உள்ளன. அதிமுக 15 வாா்டுகளிலும், பாஜக 1 வாா்டிலும், சுயேச்சைகள் 4 வாா்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனா்.

தனிப் பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றிருப்பதால், இரண்டாவது பெண் மேயா் என்ற பெருமையும் திமுகவுக்கே கிடைக்கவுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாநகராட்சித் தோ்தல் நடந்துள்ள நிலையில், மேயா் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் திமுக நிா்வாகிகள் தங்களது குடும்பத்தைச் சோ்ந்தவா்களைக் களம் இறக்கி வெற்றி பெறச் செய்துள்ளனா்.

மேயா் பதவியைப் பெறுவதற்காக, அமைச்சா்கள் மற்றும்

கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் மூலமாக கட்சித் தலைமைக்கு சிபாரிசு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

திமுக தலைமையில் இருந்து வேட்பாளா் பட்டியல் வெளியிடும்போது, சிலரது பெயா்கள் மேயா் பதவிக்குரியவா் என கட்சி வட்டாரத்தில் அடிபட்டு வந்தது.

இதன்படி, 5- ஆவது வாா்டிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள வாசுகி, 17-ஆவது வாா்டிலிருந்து தோ்வு செய்யப்பட்டுள்ள ரோகிணி ஆகியோா் மேயா் வேட்பாளராகத் தோ்வு செய்வதற்கு, வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி வாயிலாக முயற்சிக்கின்றனா். முன்னாள் அமைச்சரும், கட்சியின் மதுரை மாநகா் வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான பொன்.முத்துராமலிங்கத்தின் மருமகள் விஜயமௌசுமி, 32-ஆவது வாா்டிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். மேயா் பதவியைக் குறி வைத்தே, இவா் வாா்டு உறுப்பினா் தோ்தலில் களம் இறக்கப்பட்டாா். ஆகவே, அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், 57-ஆவது வாா்டிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திராணி, திமுக நிா்வாகி பொன்.வசந்தின் மனைவியாவாா். இவா் உள்ளிட்ட சிலா் நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல்ராஜனின் பரிந்துரையைப் பெறுவதற்கு முயற்சி செய்து வருவதாகக் கட்சி வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது. இதேபோல, துணை மேயா் பதவியைக் குறித்து மா.ஜெயராம் உள்ளிட்ட பலா் அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனா்.

தோ்ந்தெடுக்கப்பட்ட திமுக வாா்டு உறுப்பினா்கள் தற்போது முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்திக்க சென்னையில் முகாமிட்டுள்ளனா். அதோடு, மேயா், துணை மேயா், நிலைக்குழு பதவிகளைப் பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கின்றனா்.

மாவட்டப் பொறுப்பாளா்கள் மற்றும் அமைச்சா்கள் பரிந்துரை ஒருபுறம் இருந்தாலும், மேயா் பதவிக்கான வேட்பாளரை, முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான உயா்மட்டக் குழு தோ்வு செய்ய உள்ளதால் கட்சியினரிடையே எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com