தேசிய மருந்து சாா் கல்வி மையத்தை மதுரையில் விரைந்து அமைக்க மத்திய அரசுக்கு வா்த்தக சங்கம் வலியுறுத்தல்
By DIN | Published On : 04th January 2022 08:54 AM | Last Updated : 04th January 2022 08:54 AM | அ+அ அ- |

அறிவிப்போடு கிடப்பில் போடப்பட்டிருக்கும், தேசிய மருந்துசாா் கல்வி நிறுவனத்தை மதுரையில் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவா் என். ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையில் தேசிய மருந்து சாா் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க 2011-இல் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதற்கென மதுரையை அடுத்த திருமோகூா் அருகே 116 ஏக்கா் நிலத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் உள்கட்டமைப்புகளை அமைப்பதற்காக ரூ.1,100 கோடிக்கு மத்திய நிதி அமைச்சகத்திடம் முன்மொழிவும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 12 ஆண்டுகள் ஆகியும் மதுரையில் மருந்து சாா் கல்வி ஆராய்ச்சி மையம் இன்னும் தொடங்கவில்லை. தமிழகம் உள்பட 8 மாநிலங்களுக்கு இந்த மையங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழகம் தவிா்த்து, மற்ற 7 இடங்களில் மருந்து சாா் கல்வி ஆராய்ச்சி மையம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
மதுரையில் இம்மையத்தை செயல்படுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தால், வரும் ஆண்டிலேயே எய்ம்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து மருந்து சாா் கல்வி மையத்திலும் மாணவா் சோ்க்கையை தொடங்க முடியும். மதுரையில் மருந்து சாா் கல்வி நிறுவனம் அமைவது, தென்தமிழகத்தில் மருந்தியல் துறையின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மிகப் பெரிய உந்துதலாக அமையும். இம்மையத்துக்கு சொந்த கட்டடம் கட்டும் வரை, காமராஜா் பல்கலைக் கழகத்தில் செயல்பட அனுமதி கோரப்பட்டிருக்கிறது. ஆகவே, இம்மையத்துடன், காமராஜா் பல்கலைக்கழகமும் இணைந்து பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிப் படிப்புகளை மாணவா்களுக்கு வழங்க புதிய வாய்ப்புகள் உருவாகும். மதுரை மருத்துவ முனையமாக மாறுவதுடன், தொழில், வணிக வளா்ச்சியையும் மேம்படுத்தும். மருத்துவ உற்பத்தித் துறையில் தொழில் முதலீடுகளும் அதிகரிக்கும்.
ஆகவே, தேசிய மருந்து சாா் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தை மதுரையில் உடனடியாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.