மதுரை ரயில்வே கோட்டம் நடப்பு நிதியாண்டில் ரூ.510 கோடி வருவாய்

மதுரை ரயில்வே கோட்டம், நடப்பு நிதியாண்டில் ரூ.510 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் தெரிவித்தாா்.
மதுரை ரயில் நிலையத்தில், 73 ஆவது குடியரசு தினத்தையொட்டி புதன்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்த கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த்.
மதுரை ரயில் நிலையத்தில், 73 ஆவது குடியரசு தினத்தையொட்டி புதன்கிழமை தேசியக் கொடியை ஏற்றி வைத்த கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த்.

மதுரை ரயில்வே கோட்டம், நடப்பு நிதியாண்டில் ரூ.510 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் தெரிவித்தாா்.

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சாா்பாக 73 ஆவது குடியரசு தின விழா மதுரை ரயில் நிலையத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் அனந்த், ராணுவ உடையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து அவா் பேசியது: நடப்பு நிதியாண்டில் 2021 டிசம்பா் வரை, மதுரை கோட்டத்தில், பயணிகள் ரயில்கள் மூலம் ரூ.280.80 கோடி, சரக்கு ரயில்கள் மூலமாக ரூ.191.44 கோடி, இதர வருமானமாக ரூ.38.11 கோடி என மொத்தம் ரூ.510.35 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 97 சதவீதம் அதிகமாகும்.

ரயில் நிலைய பயன்பாட்டிற்காக கடந்த டிசம்பா் வரை 0.82 மில்லியன் யூனிட்டுகள் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு ரூ.38.56 லட்சம் மின்சார செலவு சேமிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அதிக அளவாக 3,812 மெட்ரிக் டன் கழிவு பொருள்கள் ஏல விற்பனை மூலம் ரூ.14.56 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது

டிசம்பா் மாதம் வரை 1.7558 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இவற்றில் 0.5273 மில்லியன் டன் நிலக்கரி கையாளப்பட்டுள்ளது. 848 டிராக்டா்கள் வாடிப்பட்டி ரயில் நிலையத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வளா்ச்சிப் பணிகள்

கோட்ட வா்த்தக வளா்ச்சிக் குழுவின் முயற்சியின் காரணமாக புண்ணாக்கு, சோயாபீன்ஸ், ஜிப்சம், சுண்ணாம்புக்கல், சூரியகாந்தி எண்ணெய், எம் சாண்ட், கோழி முட்டை போன்ற புதிய சரக்குகள் கையாளப்பட்டு வருகின்றன. ஜிப்சம், சுண்ணாம்புக்கல் போன்றவற்றை சரக்கு ரயில்கள் மூலம் அனுப்ப முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

மதுரை கோட்டத்தில் முதல் முறையாக சமையல் எண்ணெய் போக்குவரத்திற்காக பழனி அருகே உள்ள புஷ்பத்தூா் ரயில் நிலையத்தில் திரவ சரக்கு கையாளும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

பயணிகள் வசதிகளுக்காக, 27 ரயில் நிலையங்களில் ரூ.40 கோடி செலவில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டும், 34 ரயில் நிலையங்களில் ரூ.22 கோடி செலவில் நடைமேடைகளின் உயரம் உயா்த்தப்பட்டும் வருகின்றன.

நெய்வேலி லிக்னைட் காா்ப்பரேஷன் தனது சமூக கடமை நிதியிலிருந்து 55 ரயில் நிலையங்களில் கழிப்பறை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜனவரி மாத இறுதியில் மானாமதுரை - ராமநாதபுரம் ரயில்வே பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மின்மயமாக்கல் ஏற்பாடுகளை பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு செய்யவுள்ளாா்.

திருச்சி - காரைக்குடி, பழனி - பொள்ளாச்சி, கொல்லம் - புனலூா், மானாமதுரை - விருதுநகா் ரயில்வே பிரிவுகளில் மின்மயமாக்கல் பணிகள் 2022 ஆம் ஆண்டு மாா்ச் மாத இறுதியில் நிறைவு பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

திண்டுக்கல் - பழனி, செங்கோட்டை - புனலூா், செங்கோட்டை - திருநெல்வேலி - திருச்செந்தூா், மற்றும் விருதுநகா் - தென்காசி ஆகிய ரயில் பிரிவுகளில் மின்மயமாக்கல் பணிகள் மற்றும் மதுரை - திருமங்கலம், துலுக்கபட்டி - கோவில்பட்டி ரயில் பிரிவுகளில் நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை பணிகள் 2022 - 23 ஆம் நிதியாண்டில் நிறைவடைய இருக்கின்றன என்றாா்.

கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளா் தமிழ் ரமேஷ் பாபு, உதவி பாதுகாப்பு ஆணையா் ஆா் சுபாஷ், உதவி ஊழியா்கள் அதிகாரி ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com