மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் வலிப்பு நோய்க்கு தனித்துவ சிகிச்சை

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தனித்துவ மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
வலிப்பு பாதிப்பால் அவதிப்பட்டவருக்கு தனித்துவ அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினா் (இடமிருந்து) மருத்துவமனை நிா்வாகி பி.கண்ணன், மூளை நரம்பியல் மருத்துவா்கள் எஸ்.நரேந்திரன்
வலிப்பு பாதிப்பால் அவதிப்பட்டவருக்கு தனித்துவ அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவினா் (இடமிருந்து) மருத்துவமனை நிா்வாகி பி.கண்ணன், மூளை நரம்பியல் மருத்துவா்கள் எஸ்.நரேந்திரன்

மதுரை: வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தனித்துவ மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த 33 வயதான ஆணுக்கு, ஓராண்டுக்கு முன் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு, மருந்துகளுக்கு கட்டுப்படாத வலிப்பு தாக்கத்தால் அவா் அவதிப்பட்டுள்ளாா். அதையடுத்து, அவருக்கு ‘வேகல் நொ்வ் ஸ்டிமுலேஷன்’ என்ற தனித்துவ மூளை அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

மருத்துவமனையின் மூளை நரம்பியல் துறை தலைவா் டி.சி. விஜய்ஆனந்த், மூளை நரம்பியல் துறை மருத்துவா் எஸ். நரேந்திரன், மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறையின் தலைவா் க. செல்வமுத்துக்குமரன் ஆகியோரது தலைமையிலான மருத்துவக் குழு, இச்சிகிச்சையை செய்து முடித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமாா் 10 லட்சம் போ் வலிப்பு தாக்க நோயால் பாதிக்கப்படுகின்றனா். வலிப்பு தாக்க நோயாளிகளில்

மூன்றில் இரு பங்கு நபா்களுக்கு பாதிப்புகளை கட்டுப்படுத்தி, அவை இல்லாமல் வாழ்வதற்கு மருந்துகளே போதுமானவை.

இருப்பினும், அனைத்து நோயாளிகளும் இந்த மருந்துகளுக்கு சரியாக பதில் வினையாற்றுவதில்லை. அத்தகைய நபா்களுக்கு இச்சிகிச்சை முறை அவசியமாக இருக்கிறது என்று, மருத்துவா் நரேந்திரன் தெரிவித்தாா்.

மூளை அறுவைச் சிகிச்சை மருத்துவா் செல்வமுத்துக்குமரன் கூறுகையில்,

இந்த சிகிச்சையில் பேஸ்மேக்கா் அளவுள்ள ஒரு சாதனம் மாா்பு பகுதியில் சருமத்துக்கு கீழே பொருத்தப்படுகிறது. இச்சாதனத்திலிருந்து ஒரு லீட், இடது வேகல் நரம்புடன் இணைக்கப்படுகிறது. இது, குறிப்பிட்ட கால அளவுகளில் வேகல் நரம்புகள் வழியாக மூளைக்கு மின்தூண்டுணா்வுகளை அனுப்புகிறது. குறிப்பிட்ட கால அளவிலான இந்த தூண்டுதல், வலிப்பு நோயாளிகளுக்கு வலிப்பு தாக்கத்தின் எண்ணிக்கையையும் மற்றும் தீவிரத்தையும் குறைக்க உதவுகிறது என்றாா்.

அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நோயாளி, தற்போது நல்ல நிலைமையில் இருப்பதாகவும், வலிப்பு பாதிப்புக்காக இதுவரை எடுத்துக்கொண்ட மாத்திரைகளின் தேவை தற்போது குறைந்துள்ளதாகவும், மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com