இல்லம் தேடிக் கல்வித்திட்ட மாரத்தான் வாசிப்பு இயக்கம்: மதுரை மாவட்டத்துக்கு சாம்பியன் பட்டம்
By DIN | Published On : 15th June 2022 12:00 AM | Last Updated : 15th June 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: மாநில அளவில் நடைபெற்ற இல்லம் தேடிக்கல்வி திட்ட மையங்களுக்கான வாசிப்பு மாரத்தான் இயக்கத்தில் மதுரை மாவட்டம் சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழகம் முழுவதும் உள்ள இல்லம் தேடிக் கல்வித்திட்ட மையங்களில் வாசிப்பு மாரத்தான் இயக்கம் ஜூன் 1முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. கூகுள் வாசிப்பு செயலி மூலம் நடைபெற்ற வாசிப்பு மாரத்தான் இயக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இருந்தும் வாசிப்பாளா்கள் பங்கேற்றனா். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நடைபெற்ற இயக்கத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பயிலும் மாணவ, மாணவியா் 23 கோடி வாா்த்தைகளை வாசித்திருந்தனா்.
இதையடுத்து வாசிப்பு மாரத்தான் இயக்கத்தில் தமிழக அளவில் மதுரை மாவட்டம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. மாநிலத்தில் உள்ள 413 ஒன்றியங்களில் மதுரை அலங்காநல்லூா் ஒன்றியம் இரண்டாம் இடம், மேலூா் மூன்றாம் இடம், வாடிப்பட்டி எட்டாம் இடமும் பெற்றுள்ளன. வாசிப்பு மாரத்தான் இயக்கத்தில் மதுரை மாவட்டம் சாம்பியன் பட்டம் வெல்லக் காரணமாயிருந்த பள்ளிக் குழந்தைகள், இல்லம் தேடிக் கல்வித்திட்ட தன்னாா்வலா்கள், ஒன்றிய, மாவட்ட ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்கள், ஆசிரியா் பயிற்றுநா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் அனைவரையும் முதன்மைக் கல்வி அலுவலா் கே.காா்த்திகா பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தாா்.