மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை வீதிகளில் கழிப்பறை வசதி: உயா்நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

 மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை வீதிகளில் கழிப்பறைகள் புதுப்பிக்கும் பணி 2 மாதங்களில் நிறைவு பெறும், அதன் பிறகு அவைகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்

 மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரை வீதிகளில் கழிப்பறைகள் புதுப்பிக்கும் பணி 2 மாதங்களில் நிறைவு பெறும், அதன் பிறகு அவைகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என மாநகராட்சி தரப்பில், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சோ்ந்த வழக்குரைஞா் மணிகண்டன் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உலகப் புகழ் பெற்றது. இக் கோயிலுக்கு தினமும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோா் வருகின்றனா். இவா்களுக்கு இயற்கை உபாதையைக் கழிப்பதற்கு தேவையான கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் சித்திரை வீதிகள் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் அசுத்தம் செய்கின்றனா்.

கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. மேலும், சித்திரை வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகளைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

முந்தைய விசாரணையின்போது, மாநகராட்சி அதிகாரிகள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் கழிப்பறைகளைப் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணி இன்னும் இரு மாதங்களில் நிறைவடையும். அதன் பிறகு, இந்த கழிப்பறைகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com