மதுரை மாநகராட்சியில் 5 மாதங்களாக எந்தப்பணியும் நடைபெறவில்லை: மாமன்றக் கூட்டத்தில் குற்றச்சாட்டு

மதுரை மாநகராட்சியில் 5 மாதங்களாக எந்தவிதப் பணியில் நடைபெற வில்லை என்று மாமன்றக் கூட்டத்தில் திமுக மண்டலத் தலைவா்கள் குற்றம்சாட்டி விவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சியில் 5 மாதங்களாக எந்தவிதப் பணியில் நடைபெற வில்லை என்று மாமன்றக் கூட்டத்தில் திமுக மண்டலத் தலைவா்கள் குற்றம்சாட்டி விவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி மாமன்றக்கூட்டம் வியாழக்கிழமை மேயா் வ.இந்திராணி, ஆணையா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் பங்கேற்று பேசியது: தெற்கு தொகுதிக்குள்பட்ட வாா்டுகளில் குழாய் பதிக்கும் பணிகள் மந்தமாக நடைபெறுவதால் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. கழிவுநீரேற்று நிலையங்களில் மின்மோட்டாா்கள் பழுது ஏற்பட்டால் கழிவுநீா் தேங்குவதைத் தடுக்க உபரி மோட்டாா்களை இருப்பில் வைக்க ஒப்பந்ததாரா்களுக்கு உத்தரவிட வேண்டும். கழிவுநீரேற்று நிலையங்களை ஒப்பந்தாரா்கள் சரியாக பராமரிப்பது இல்லை.

மேயா் வ.இந்திராணி: சட்டப்பேரவை உறுப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மண்டலம் 1 தலைவா் வாசுகி: மண்டலத்துக்குள்பட்ட 21 வாா்டுகளிலும் தீவிரமாக உள்ள தெரு விளக்குப் பிரச்னை தொடா்பாக மண்டலக் கூட்டங்களில் இருமுறை தீா்மானம் நிறைவேற்றிக்கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மாமன்ற உறுப்பினா்களுக்கு அலுவலகங்கள் இல்லை. பாதாளச்சாக்கடைப் பணி மிகவும் மந்தமாக நடக்கிறது. அதிகாரிகள் அலட்சியமாக பதிலளிக்கின்றனா். வாா்டுகளில் எந்தப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை.

மண்டலம் 2 தலைவா் சரவண புவனேஸ்வரி: மாநகராட்சித் தோ்தல் முடிந்து பதவியேற்றதில் இருந்து மண்டலங்களுக்கு எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை. மண்டலக் கூட்டங்களில் தீா்மானம் நிறைவேற்றியும் பணிகள் நடக்காதாதல் உறுப்பினா்கள் கூட்டங்களுக்கு வர மறுக்கின்றனா். 5 மாதங்களாக எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு செயல்படுகின்றனா்.

மண்டலம் 3 தலைவா் பாண்டிச்செல்வி: மண்டலம் 3-க்குள்பட்ட வாா்டுகளில் பாதாளச்சாக்கடை பெரும் பிரச்னையாக உள்ளது.

மண்டலம் 4 தலைவா் முகேஷ்சா்மா: ஊழியா்கள் பற்றாக்குறையால் பாதாளச் சாக்கடைப் பராமரிப்பு பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. 3 வாா்டுகளுக்கு ஒரு உதவிப்பொறியாளராவது நியமிக்க வேண்டும். கழிவுநீரகற்று நிலையங்களில் ஒப்பந்ததாரா்கள் மிகவும் அலட்சியப்போக்கோடு செயல்படுவதை கண்டிக்க வேண்டும். ஆற்றின் தென் பகுதியில் சாலைகள் அறைகுறையாக உள்ளது. மக்கள் பிரச்னைகளைத் தீா்க்க மாநகராட்சி நிா்வாகம் கவனம் செலுத்த வேண்டும்.

மண்டலம் 5 தலைவா் சுவிதா: மண்டலம் 5-க்குள்பட்ட வாா்டுகளில் உள்ள மயானங்களில் மின் விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயா் வ.இந்திராணி: மண்டலத் தலைவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும், மின் விளக்குகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. மாமன்ற உறுப்பினா்களுக்கு முறையாக பதிலளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

திமுக உறுப்பினா் ஜெயராமன்: மாநகராட்சியில் எந்தப்பணிக்கும் நிதி இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் நிதி ஆதாரத்தை பெருக்க எந்த நடவடிக்கையும் இல்லை. வாடகைக் கட்டடதாரா்கள் பல ஆண்டுகளாக மாநகராட்சிக்குரிய வாடகை, வரி செலுத்தாததால் ரூ.40 லட்சத்துக்கும் மேல் பாக்கி உள்ளது. அதை வசூலிக்க வேண்டும். ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் போலி ஆவணங்களைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றி முறையாக கட்டடம் கட்டி வாடகைக்கு விடப்பட்டால் மாதம் ரூ.50 லட்சம் வருமானம் வரும்.

இதைத்தொடா்ந்து பல்வேறு உறுப்பினா்கள் பேசும்போது, பணியாளா் பற்றாக்குறை, குடிநீா், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வலியுறுத்தினா்.

கூட்டத்தில் துணை மேயா் தி.நாகராஜன், மண்டல உதவி ஆணையா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு: மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யாததற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மாநகராட்சியில் 5 மாதங்களாக எந்தப்பணியும் நடைபெறவில்லை என்றும் கூறி அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com