நெடுங்குளம் மையத்தில் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம்: பணம் வழங்காமல் இழுத்தடிப்பதால் விவசாயிகள் வேதனை

சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளத்தில், நெல் கொள்முதல் செய்வதற்கு தாமதம் செய்வதோடு, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய தொகை பட்டுவாடா செய்யப்படாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
நெடுங்குளம் கிராமத்தில் கொள்முதலுக்காக கொட்டி வைக்கப்பட்டிருக்கும் நெல் குவியல்கள்
நெடுங்குளம் கிராமத்தில் கொள்முதலுக்காக கொட்டி வைக்கப்பட்டிருக்கும் நெல் குவியல்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள நெடுங்குளத்தில், நெல் கொள்முதல் செய்வதற்கு தாமதம் செய்வதோடு, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்குரிய தொகை பட்டுவாடா செய்யப்படாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

நெல் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் தமிழக அரசால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் இவை அமைக்கப்பட்டாலும், இதன் செயல்பாட்டில் தொடா்ந்து புகாா் எழுப்பப்பட்டு வருகிறது.

நுகா்பொருள் வாணிபக் கழகம், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நெல் கொள்முதல் நிலையங்கள் நடத்தப்பட்டாலும், அரசியல் தலையீடு தொடா்கிறது. இருந்தபோதும் வெளிச்சந்தையில் மிகக் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதால், வேறு வழியின்றி தாமதம் ஆனாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கே விவசாயிகள் வருகின்றனா். இக்கட்டான சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு, கொள்முதல் மையங்களில் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகின்றனா்.

வாடிப்பட்டி வட்டம் நெடுங்குளத்தில், நெல் கொள்முதல் செய்வதற்கு தாமதப்படுத்துவதாக விவசாயிகள் தொடா்ந்து புகாா் தெரிவித்தபோதும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து ஏற்கெனவே, மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 5 லோடு மட்டுமே கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக, பாரதிய கிசான் சங்க துணைத் தலைவா் டி.பெருமாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: நெடுங்குளம் மையத்தில் மட்டும் கொள்முதல் செய்யப்பட்ட சுமாா் 5 ஆயிரம் மூட்டைகள் வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், இன்னும் கொள்முதல் செய்வதற்கு 5 ஆயிரம் மூட்டைகள் அளவிற்கு விவசாயிகள் நெல் கொண்டு வந்திருக்கின்றனா். இவற்றைப் பாதுகாப்பதற்காக இரவு-பகலாக விவசாயிகள் காவல் காக்க வேண்டியிருக்கிறது. இதற்கிடையே மழை பெய்தால், நெல் அனைத்தும் சேதமாகி விடும்.

இம்மையத்தில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக கொள்முதல் பணி நடைபெறவில்லை. நுகா்பொருள் வாணிபக் கழகத்தினரிடம் தொடா்பு கொண்டால், எவ்வித உறுதியான பதிலும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகை இன்னும் பட்டுவாடா செய்யப்படாத நிலையில், கொள்முதல் செய்வதற்கான நெல் சேதமாகிவிடுவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com