பங்குனிப் பெருவிழா திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்
By DIN | Published On : 22nd March 2022 09:42 AM | Last Updated : 22nd March 2022 01:12 PM | அ+அ அ- |

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. நடப்பு ஆண்டுக்கான திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் அன்ன வாகனம், பூத வாகனம், தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சொக்கநாதர் பிரியாவிடை, மீனாட்சி அம்மன் முன்னிலையில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக கிரிவல பாதை வழியாக பெரிய தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக காலை 4 மணிக்கு உற்சவர் சன்னதியில் சுப்ரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருளினார். காலை 6.20 மணிக்கு பக்தர்கள் அரோகரா கோஷமிட்டபடி வடம் பிடித்து இழுக்க தேர் நிலையில் இருந்து புறப்பாடாகியது.
முன்னதாக சிறிய சட்டத்தேரில் விநாயகர் முன்னே செல்ல தொடர்ந்து கிரிவலப்பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பெரிய தேர் ஆடி அசைந்து அழகாக சென்றது. தேரோட்ட திருவிழாவிற்கு மதுரை மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர்-மோர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.