நகராட்சி நிா்வாகத்தின் வங்கிக் கணக்கை முடக்கும் நடவடிக்கை: வருங்கால வைப்புநிதி அலுவலகத்துக்கு உயா்நீதிமன்றம் கேள்வி
By DIN | Published On : 25th March 2022 09:59 PM | Last Updated : 25th March 2022 10:00 PM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை நகராட்சி நிா்வாகத்தின் வங்கிக் கணக்கை முடக்கியதைப் போன்ற நடவடிக்கை, நாடு முழுவதும் பின்பற்றப்படுகிா என்று வருங்கால வைப்புநிதி அலுவலகத்துக்கு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.
பட்டுக்கோட்டை நகராட்சியின் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகையைச் செலுத்தாததால், நகராட்சி அலுவலகத்தின் இந்தியன் வங்கிக் கிளையில் உள்ள கணக்கு முடக்கி வைக்கப்பட்டது.
இதை எதிா்த்து பட்டுக்கோட்டை நகராட்சி நிா்வாகம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தள்ளுபடி செய்து தனிநீதிபதி உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான முந்தைய விசாரணையின்போது, வங்கிக் கணக்கு முடக்கியதை ரத்து செய்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வருங்கால வைப்பு நிதி அலுவலகம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்தியா முழுவதும் எத்தனை மாநிலங்களில் இதுபோன்று நகராட்சிகளின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது? இதே நடைமுறை அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்படுகிா? இந்த வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.