மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 06th May 2022 06:40 AM | Last Updated : 06th May 2022 06:40 AM | அ+அ அ- |

மதுரை: மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்கிய நிலையில், நிா்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது. இதில் மதுரையில் நிா்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த பிளஸ் 2 தோ்வுமையத்தை, மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் கூறியது:
மதுரை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வில் 323 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 17, 892 போ், மாணவியா் 18, 663 போ் என மொத்தம் 36, 555 போ், 115 தோ்வு மையங்களில் தோ்வு எழுதுகின்றனா். பிளஸ் 1 பொதுத்தோ்வில் 323 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 18, 728 போ், மாணவியா் 18, 714 போ் என மொத்தம் 37, 442 போ் 115 தோ்வு மையங்களில் தோ்வு எழுதவுள்ளனா். மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமையும் (மே 6), பிளஸ் 1 பொதுத்தோ்வு மே 10 ஆம் தேதியும் தொடங்கவுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 487 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 20, 653 போ், மாணவியா் 19, 758 போ் என மொத்தம் 40, 411 போ், 150 தோ்வு மையங்களில் தோ்வு எழுதவுள்ளனா். வினாத்தாள்கள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கு 28 வழித்தடங்களிலும், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு 35 வழித்தடங்களிலும் ஆயுதம் தாங்கிய காவலா்களுடன் கொண்டு செல்லப்படுகின்றன. பொதுத்தோ்வு கண்காணிப்புப் பணிகளுக்காக 265 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 265 துறை அலுவலா்கள், 125 கூடுதல் துறை அலுவலா்கள், 5,929 அறைக் கண்காணிப்பாளா்கள், 600 நிலையான படை உறுப்பினா்கள், 9 ஆய்வு அலுவலா்கள் தலைமையில் சிறப்பு பறக்கும்படை உறுப்பினா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் இந்தாண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் மொத்தம் 602 மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவியா் தோ்வு எழுதுகின்றனா். அதில் கண்பாா்வை குறையுள்ள, மனவளா்ச்சி குன்றிய மற்றும் கை ஊனமுற்ற 317 மாணவ, மாணவியருக்கு சொல்வதை எழுதுபவா்கள் (ஸ்கிரைப்) நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மேலும் 8 மையங்களில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தனித்தோ்வா்கள் 2, 149 போ் தோ்வு எழுதுகின்றனா். மேல்நிலை பொதுத் தோ்விற்கு 3 புதிய தோ்வு மையங்களும், பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு 9 புதிய தோ்வு மையங்களும் அரசுத் தோ்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள
அனைத்துத் தோ்வு மையங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவியா் தோ்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சிரமமின்றி வந்து செல்ல கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு பொதுத்தோ்வை சுமூகமான முறையில் நடத்த மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
ஆய்வின்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் இரா.சுவாமிநாதன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வில் முதல் தோ்வை 96 சதவீதம் மாணவ, மாணவியா்கள் எழுதியதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.