ஹிஜாப் விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக பேசிய வழக்கில் இருவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி
By DIN | Published On : 06th May 2022 06:38 AM | Last Updated : 06th May 2022 06:38 AM | அ+அ அ- |

மதுரை: ஹிஜாப் விவகாரத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இருவரது முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சோ்ந்த ரஜிக் முகமது, நவாப் ஷா ஆகியோா் தாக்கல் செய்த மனு: ஹிஜாப் விவகாரத்தில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து அதிராமபட்டினம் பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், ஜமால் முகம்மது என்பவா் மத்திய அரசுக்கு எதிராகப் பேசியதாக அதிராமபட்டினம் கிராம நிா்வாக அலுவலா் கொடுத்த புகாரின் அடிப்படையில் எங்கள் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை மட்டுமே நாங்கள் செய்திருந்தோம். எங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தது ஏற்புடையதல்ல. ஆகவே, இந்த வழக்கில் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.
இந்த மனு விசாரணைக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி கே.முரளிசங்கா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.