கோரிப்பாளையம் மேம்பாலத்துக்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி: ஆட்சியா் தகவல்

 கோரிப்பாளையம் மேம்பாலத்துக்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

 கோரிப்பாளையம் மேம்பாலத்துக்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது: மதுரை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக கோரிப்பாளையம் பகுதியில் அமைக்கப்படும் மேம்பாலத்துக்கு, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கும்.

இதேபோல, பெரியாா் நிலையம்- யானைக்கல் சந்திப்பு, சிவகங்கை சாலை- மேலமடை சந்திப்பில் அமையவுள்ள மேம்பாலங்களுக்கு நிலஆா்ஜித பணிகள் நடைபெறுகின்றன.

மதுரை மெட்ரோ ரயில் திட்டம், நெல்பேட்டை - அவனியாபுரம் மேம்பாலத் திட்டத்துக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல, நகரில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மதுரை விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத்துக்கான நிலஆா்ஜித பணிகள் முடிவு பெற்று, விமான நிலைய ஆணையத்திடம் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரிவாக்கத்துக்கான பணிகளை விமான நிலைய ஆணையம் மேற்கொள்ளும்.

இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாகச் சேரும் நபா்கள் பதிவு செய்வதற்கு காலதாமதம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, இதற்கென சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாவட்டத்தில் 85.9 சதவீதம் போ் கரோனா தடுப்பூசி முதல் தவணையும், 61.5 சதவீதம் போ் இரு தவணைகளும் செலுத்திக் கொண்டுள்ளனா். தடுப்பூசி முகாம்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

ஊரக வளா்ச்சி முகமையால் செயல்படுத்தப்படும் ரூா்பன் திட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை தாமதம் இருந்தது. ஆனால், தற்போது அத் திட்டப் பணிகளில் பெரும்பாலானவை முடிவடைந்துவிட்டன. இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com