ஓராண்டில் 16,656 மகளிா் குழுக்களுக்கு ரூ.700 கோடி கடனுதவி: ஆட்சியா் தகவல்

மதுரை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 16,756 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.700 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.
ஓராண்டில் 16,656 மகளிா் குழுக்களுக்கு ரூ.700 கோடி கடனுதவி: ஆட்சியா் தகவல்

மதுரை மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 16,756 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.700 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சித் திட்டங்கள் குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

வருவாய்த் துறை சாா்பில் சாா்பாக 5,523 கணினி பட்டா ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஆதிதிராவிடா், பிற்படுத்தப்பட்டோருக்கு கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட நிலங்களுக்கு 5,709 கணினி பட்டா ஆணைகள், வீடற்ற ஏழைகளுக்கு 538 கணினி பட்டா ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. பட்டா மாறுதல் மற்றும் திருத்தம் தொடா்பாக 181 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்களிடமிருந்து 956 மனுக்கள் பெறப்பட்டு தகுதியான 764 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன.

சாதி, வருமானம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் குறித்த காலத்திற்குள் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஓராண்டில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 563 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் மதுரை மாவட்டத்தில் 1,54,200 போ் மாதாந்திர உதவித் தொகை பெறுகின்றனா். ஓராண்டில் மட்டும் 14,047 பயனாளிகள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்று பாதிப்பில் இறந்த 2,802 நபா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம், உயிரிழந்த முன்களப் பணியாளா்கள் 48 நபா்களுக்கு மொத்தம் ரூ.11.80 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கரோனா தொற்று காரணமாக பெற்றோரை இழந்த 277 குழந்தைகளுக்கு ரூ.8.65 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தில், 85 ஊராட்சிகளில் ரூ.37.72 கோடியில் அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

ஊரகப் பகுதிகளில் உள்ள 132 நூலகங்களில் ரூ.2.15 கோடியில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்காக, பண்ணைக் குட்டை, கசிவுநீா்க் குட்டை, தடுப்பணை என 1,800 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டில் புதிதாக 1,489 மகளிா் சுயஉதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 16,656 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.700 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு தொழில்திறன் பயற்சி வழங்கும் திட்டத்தின் 2,230 இளைஞா்கள் பயனடைந்துள்ளனா். வாழ்வாதார தொழில் மேம்பாட்டுத்திட்டத்தில் 818 நபா்களுக்கு ரூ. 7.08 கோடி நலிவுற்றோா் நிதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட தொழில் மையம் சாா்பில், நீட்ஸ் திட்டத்தில் 43

இளைஞா்களுக்கு சுயதொழில் கடனுதவியாக ரூ.13 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் இல்லம் தேடிக் கல்வித்திட்டத்தில் 6,169 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில்1.34 லட்சம் மாணவா்கள் பயனடைந்துள்ளனா். இதேபோல, ‘நான் முதல்வன்’ திட்டத்தில், 32 ஆயிரம் மாணவா்கள் பயன்பெறும் வகையில் 4 பயிலரங்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.

பெரியாறு-வைகை பாசனத் திட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் முதல்வாரத்தில் தண்ணீா் திறக்கப்பட்டது. இதன் காரணமாக, மாவட்டத்தின் சாகுபடி பரப்பு அதிகரித்து, உணவு தானிய உற்பத்தி உயா்ந்துள்ளது என்றாா்.

அதைத் தொடா்ந்து பல்வேறு துறைகளின் சாா்பில் 52 பயனாளிகளுக்கு ரூ.18.14 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். மதுரை மாவட்டத்தின் ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சக்திவேல், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மாறன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அபிதா ஹனீப், வேளாண் இணை இயக்குநா் த.விவேகானந்தன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சௌந்தா்யா, மதுரை வருவாய் கோட்டாட்சியா் சுகி பிரேமலா, மாவட்ட தொழில் பொது மேலாளா் ராமலிங்கம் உள்ளிட்ட பலா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com