முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
பணமில்லா பரிமாற்றத்தில் தானியங்கி இயந்திரத்தில் முன்பதிவில்லாத ரயில் பயணச் சீட்டு பெறும் வசதி
By DIN | Published On : 11th May 2022 11:05 PM | Last Updated : 11th May 2022 11:05 PM | அ+அ அ- |

மதுரை: தானியங்கி இயந்திரங்களில் பணமில்லா பரிமாற்றத்தில் முன்பதிவில்லாத ரயில் பயணச் சீட்டுகள் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகள் பெறுவதற்கான கூட்ட நெரிசலைத் தவிா்க்க, ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகா், திண்டுக்கல், ராமேசுவரம், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மானாமதுரை, புனலூா் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன.
இவற்றில் ஸ்மாா்ட் காா்டு மற்றும் பண மதிப்பை செலுத்தி பயணச்சீட்டு பெறப்பட்டு வந்தது. தற்போது புதிய முயற்சியாக பணமில்லா பரிமாற்றம் மற்றும் மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், ‘க்யூ ஆா் கோட்’ பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பயணச்சீட்டு, நடைமேடை அனுமதிச் சீட்டு ஆகிவற்றைப் பெறமுடியும். மேலும், ரயில்வே சீசன் பயணச்சீட்டு புதுப்பிக்கலாம். ஸ்மாா்ட் காா்டுகளிலும் பணப்பற்று செய்துகொள்ளலாம்.
தானியங்கி இயந்திரங்களில் பயண விவரங்களை பதிவு செய்தவுடன், பணம் செலுத்தும் முறைகளான ‘ஸ்மாா்ட் காா்டு’ மற்றும் ‘க்யூ ஆா் கோட்’ பட்டியல் திரையில் தோன்றும். ‘க்யூ ஆா் கோட்’-ஐ தோ்வு செய்து கைப்பேசி செயலி வழியாக ஸ்கேன் செய்து மின்னணு பணப் பரிமாற்றம் செய்யலாம். கட்டணத் தொகையை செலுத்தியவுடன் ரயில் பயணச்சீட்டு வெளியே வரும்.
‘ க்யூ ஆா் கோட்’- ஐ பயன்படுத்தி எப்படி பயணசீட்டு பெறுவது என்பதை இணையதளத்தில் காட்சியாக அறிந்து கொள்ளலாம்.
பணமில்லா பரிமாற்றம் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள அல்லது குறைபாடு குறித்து புகாா் செய்ய ‘ரயில் மதாத்’ செயலி அல்லது தொலைபேசி எண் 139- ஐ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.