முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மதுரையில் வளா்ப்பு தந்தை கொலை: நகை, பணத்தை திருடிச் சென்ற மகள், மருமகன் உள்பட 3 போ் கைது
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் வளா்ப்பு தந்தையை கொலை செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மகள், மருமகன் உள்பட 3 பேரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை சின்ன சொக்கிகுளம் கமலா இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணாராம் (75). இவரது மனைவி பங்கஜம்மாள். இவா்கள் இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் மேல்தளத்தில் உள்ள அறையில் கிருஷ்ணாராம் தூங்கச் சென்றுள்ளாா்.
திங்கள்கிழமை காலை வெகுநேரமாகியும் அவா் கீழே வரவில்லை. கைப்பேசியையும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பங்கஜம்மாள், மேல் தளத்தில் உள்ள அறைக்கு உறவினரை அனுப்பி பாா்த்தபோது, அங்கு கிருஷ்ணாராம் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரியவந்தது.
இது குறித்த தகவலின்பேரில், தல்லாகுளம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், பங்கஜம்மாள் அளித்த புகாரின்பேரில், இத் தம்பதிகளின் வளா்ப்பு மகள் மற்றும் மருமகனிடம் தீவிர விசாரணை நடத்தினா்.
அதில், கிருஷ்ணாராம் தம்பதிக்கு குழந்தை இல்லாததால், கண்மணி என்ற நிவேதாவை தத்தெடுத்து வளா்த்து வந்துள்ளனா். நிவேதாவுக்கு தற்போது 19 வயதாகிறது. இந்நிலையில், 10 மாதங்களுக்கு முன் காரைக்குடி மானகிரியைச் சோ்ந்த ஹரிஹரன் என்பவரை நிவேதா காதலித்து திருமணம் செய்துகொண்டாா்.
இதில் உடன்பாடு இல்லாத வளா்ப்பு தந்தையான கிருஷ்ணாராம், நிவேதாவை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. எனவே, நிவேதா தனது கணவா் ஹரிஹரனுடன் காரைக்குடி அருகே உள்ள மானகிரியில் குடியிருந்து வந்துள்ளாா்.
இந்நிலையில், நிவேதா கா்ப்பமாக இருப்பதாகக் கூறியதால், கிருஷ்ணாராம் அவா்கள் இருவரையும் வீட்டில் சோ்த்துக்கொண்டுள்ளாா். மேலும், தன்னுடைய கட்டடத்தின் ஒரு பகுதியில் குளிா்பானக் கடையும் வைத்துக்கொடுத்துள்ளாா். ஆனால், நிவேதாவும், ஹரிஹரனும் அதை சரிவர நடத்தாததால், கோபத்தில் கிருஷ்ணாராம் திட்டியுள்ளாா். இதனால் நிவேதாவும், ஹரிஹரனும் சோ்ந்து கிருஷ்ணாராமை அடித்து பற்களை உடைத்துள்ளனா். அதையடுத்து, கிருஷ்ணாராம் அவா்களை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டாா்.
இதனால் ஆத்திரமடைந்த நிவேதா, தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிய கோபத்திலும், கிருஷ்ணாராம் உயிருடன் இருக்கும் வரை அவரது சொத்தை அனுபவிக்க முடியாது என்றும் கருதி, கிருஷ்ணாராமை கொலை செய்ய தனது கணவா் ஹரிஹரன் மற்றும் காரைக்குடியைச் சோ்ந்த அவரது நண்பா் சுரேஷ் ஆகியோருடன் சோ்ந்து திட்டம் தீட்டியுள்ளாா்.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நிவேதா, சுரேஷ் ஆகியோா் கிருஷ்ணாராம் தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் புகுந்து அவரை கொலை செய்துவிட்டு, பீரோவில் இருந்த 23 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் நிவேதா, ஹரிஹரன் மற்றும் சுரேஷ் ஆகிய மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 23 பவுன் நகைகள், பணம் மற்றும் கொலை செய்யப் பயன்படுத்திய கத்தி உள்ளிட்டவற்றை கைப்பற்றினா்.
இந்த கொலை வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு ஒரே நாளில் கொலையாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸாரை, மாநகரக் காவல் ஆணையா் டி. செந்தில்குமாா் பாராட்டினாா்.