முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ.16 லட்சம் நிதியுதவி
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

மதுரை: மதுரையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு, காவல் துறை நண்பா்கள் குழு சாா்பில் ரூ.16 லட்சம் நிதியுதவி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த மகேந்திரன், கடந்த ஜனவரி மாதம் வீட்டில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
காவலா் மகேந்திரன் கடந்த 2008ஆம் ஆண்டு காவல்துறை பணியில் சோ்ந்தாா். இந்நிலையில், அதே ஆண்டில் அவருடன் காவல்துறை பணியில் சோ்ந்த காவலா்கள் சாா்பில், அவரது குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்காக குழு அமைத்து நிதி வசூலிக்கப்பட்டது. இதில், ரூ.16.05 லட்சம் நிதி திரட்டப்பட்டது.
இதையடுத்து, மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் முன்னிலையில், மகேந்திரன் குடும்பத்தினருக்கு நிதி வழங்கப்பட்டது. மேலும், மகேந்திரனின் ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.10.95 லட்சம், ஸ்டேட் வங்கியின் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சம் மற்றும் கையிருப்புத் தொகையாக ரூ.9,500 ஆகியவையும் அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.
இதைப் பெற்றுக்கொண்ட மகேந்திரன் குடும்பத்தினா், காவல் துறை நண்பா்களுக்கும், மதுரை ஊரகக் காவல் கண்காணிப்பாளருக்கும் நன்றி தெரிவித்தனா்.