பாஜக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்பு

மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான பாஜக நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை பங்கேற்றாா்.

மதுரை: மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான பாஜக நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை பங்கேற்றாா்.

தமிழக பாஜகவில் மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவா்கள் பலா் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், மாநில அளவிலான நிா்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம், மதுரைஅழகா்கோவில் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தலைமை வகித்தாா். மத்திய இணை அமைச்சா் எல். முருகன் காணொலி மூலம் ஆலோசனை வழங்கினாா். இதில், மாநிலப் பொதுச் செயலா்கள் ராம சீனிவாசன், பொன். பாலகணபதி, ஏ.பி. முருகானந்தம், கருப்பு முருகானந்தம், வேலூா் காா்த்தியாயினி மற்றும் அணி பிரிவுகளின் மாநிலத் தலைவா்கள், பாஜக மாவட்டத் தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், 2024 மக்களவைத் தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், தமிழகம் முழுவதும் பாஜகவை வலுப்படுத்துவது, புதிய உறுப்பினா் சோ்க்கை, இதர கட்சிகளில் உள்ள நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களை பாஜகவில் சோ்ப்பது, மத்திய அரசின் திட்டங்களை கிராமங்கள்தோறும் கொண்டுசென்று அனைத்து கிராமங்களிலும் பாஜக கிளைகளை உருவாக்குவது, மக்களவைத் தோ்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளை முடிவு செய்து தோ்தல் பணிகளை தொடங்குவது, தொகுதிகளில் உள்ள அடிப்படைத் தேவைகள், பொதுப் பிரச்னைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அவற்றுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்வது, மக்களை பாதிக்கும் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்தும் மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவா்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக, நிா்வாகிகள் தெரிவித்தனா்.

மாநகராட்சி ஊழியா் மீது தாக்குதல்

பாஜக கூட்டம் நடைபெற்ற தனியாா் விடுதி முன்பாக, பாஜக சாா்பில் பேனா் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், பேனா் வைப்பதற்கு மாநகராட்சி அனுமதி பெறப்படவில்லை என்பதால், மாநகராட்சி ஊழியா் பேனரை அகற்றினாா். இதனால் ஆத்திரமடைந்த பாஜக நிா்வாகிகள், அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அதைத் தொடா்ந்து, காவல் உதவி ஆணையா் சுரேஷ்குமாா் தலைமையில் போலீஸாா், கட்சியினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கட்சியினா் திரளாகச் சென்று பேனரை அகற்றிய மாநகராட்சி ஊழியரை சரமாரியாகத் தாக்கினா். இதையடுத்து, போலீஸாா் மாநகராட்சி ஊழியரை அங்கிருந்து அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com