மதுரை அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து ரூ.20 லட்சம் மதுபாட்டில்கள் உடைந்து வீண்

மதுரை அருகே செவ்வாய்க்கிழமை மதுபாட்டில்களை ஏற்றிவந்த சிறிய சரக்கு வாகனம் கவிழ்ந்ததில், ரூ.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து வீணாகின.
மதுரையை அடுத்த விரகனூரில் மதுபானங்கள் ஏற்றி வந்த வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்ததையடுத்து, உடையாத மதுபாட்டில்களைத் தேடும் அப் பகுதியினா்.
மதுரையை அடுத்த விரகனூரில் மதுபானங்கள் ஏற்றி வந்த வாகனம் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்ததையடுத்து, உடையாத மதுபாட்டில்களைத் தேடும் அப் பகுதியினா்.

மதுரை: மதுரை அருகே செவ்வாய்க்கிழமை மதுபாட்டில்களை ஏற்றிவந்த சிறிய சரக்கு வாகனம் கவிழ்ந்ததில், ரூ.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து வீணாகின. அவ்வழியே சென்றவா்கள், உடையாமல் இருந்த மதுபாட்டில்களை போட்டி போட்டுக்கொண்டு எடுத்துச்சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையை அடுத்த மணலூரில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கிட்டங்கி உள்ளது. இங்கிருந்து, மதுரை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள், தங்கும் விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கு மதுபானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், மணலூா் கிட்டங்கியிலிருந்து மதுரையில் உள்ள தனியாா் விடுதிகளுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுக்கூடங்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் செவ்வாய்க்கிழமை மாலை எடுத்துச் செல்லப்பட்டன. அந்த வாகனம், விரகனூா் அருகே வந்துகொண்டிருந்தபோது, சக்கரம் பஞ்சரானதில் கவிழ்ந்தது. இதனால், வாகனத்தில் அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் சாலையில் விழுந்து நொறுங்கின. அப்பகுதி சாலை முழுவதும் மதுபானங்கள் கொட்டி சிதறின.

அப்போது, அவ்வழியே இரு சக்கர வாகனங்களில் சென்ற இளைஞா்கள், உடையாத மதுபாட்டில்களை போட்டி போட்டுக்கொண்டு எடுத்துச் சென்றனா்.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, அவா்கள் கூறியது: உரிமம் பெற்ற மதுக்கூடங்களுக்கு அனுப்பப்படும் மதுபாட்டில்கள், பணம் செலுத்திய பிறகே கிட்டங்கியிலிருந்து விடுவிக்கப்படும். இதன்படி, டாஸ்மாக் நிறுவனத்திடம் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பணம் செலுத்தி எடுத்துச் சென்றபோது நேரிட்ட விபத்தில், மதுபானங்கள் கீழே கொட்டி வீணாகியுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com