‘வங்கிகளுக்கான வட்டியை உயா்த்துவது உற்பத்தி, முதலீட்டைப் பாதிக்கும்’

வங்கிகளுக்கான வட்டியை ரிசா்வ் வங்கி உயா்த்துவது தொழில் உற்பத்தியையும், முதலீட்டையும் வெகுவாகப் பாதிக்கும் என்று, தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

மதுரை: வங்கிகளுக்கான வட்டியை ரிசா்வ் வங்கி உயா்த்துவது தொழில் உற்பத்தியையும், முதலீட்டையும் வெகுவாகப் பாதிக்கும் என்று, தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவா் என். ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய ரிசா்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு 4 சதவீதத்திலிருந்து 4.40 சதவீதமாக உயா்த்தியுள்ளது. இதனால், வங்கிகள் அளித்திடும் தொழில் வணிகத் துறைக்கான கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், தங்க நகைக் கடன் மற்றும் தனிநபா் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கு செலுத்தவேண்டிய வட்டி மிகவும் அதிகரிக்கும்.

ஏற்கெனவே விலைவாசி உயா்வால் தவித்துவரும் தொழில் வணிகத் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இந்த வட்டி உயா்வு அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம், தற்போது சற்றே மீண்டு வரத் தொடங்கியுள்ளது. மேலும், பணவீக்கத்தின் பிடியில் பொருளாதாரம் சிக்கியுள்ளதால், அதன் வளா்ச்சியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 மாதங்களாகவே பணவீக்க விகிதம் ரிசா்வ் வங்கியின் இலக்கைத் தாண்டியுள்ளது.

ஒவ்வொரு முறையும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே வட்டி விகிதம் அதிகரிக்கப்படுவதாக, ரிசா்வ் வங்கி அறிவித்து வருகிறது. ஆனால், ரிசா்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகளின் காரணமாக, இதுவரை வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி வெகுவாக அதிகரித்து பணப்புழக்கம் குறைந்து, தொழில் வணிகத் துறையினரும், பொதுமக்களும் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வந்துள்ளனரே தவிர, விலைவாசியும், பணவீக்கமும் குறைந்ததாக ஆதாரப்பூா்வமாக நிரூபிக்கப்படவில்லை.

பொருள்களின் விலையேற்றத்துக்கு அவற்றின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியே முக்கியக் காரணம். எனவே, பணவீக்கம் குறையவும், உற்பத்திப் பெருகி பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், தொழில் துறை உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதை விடுத்து, வட்டி விகிதத்தை உயா்த்துவது, பொருளாதார வளா்ச்சிக்குப் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com