டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக் கோரிய மனு: தேனி மாவட்ட ஆட்சியா் பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவமனை மற்றும் கோயில் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக் கோரிய மனுவைப் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு தேனி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை

மதுரை: மருத்துவமனை மற்றும் கோயில் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக் கோரிய மனுவைப் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு தேனி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் பூதிபுரத்தைச் சோ்ந்த சங்கா் தாக்கல் செய்த மனு: பூதிபுரம் பேரூராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. மதுபானக் கடை மிக அருகிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. கடையின் வலது பக்கத்தில் இரு கோயில்கள் உள்ளன. மேலும் கடையின் அருகே ஏராளமான பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோா் பணியாற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்நிலையில் இப் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் மருத்துவனைக்கு வரக்கூடிய முதியோா், கா்ப்பிணிகள், குழந்தைகள், தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லக் கூடிய பெண்கள், மாணவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் இடையூறாக இருந்து வருகிறது.

இதுகுறித்து பூதிபுரம் கிராம மக்களால் அளிக்கப்பட்ட புகாரையடுத்து, மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, மேற்படி கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதாக உறுதி அளித்தாா். இருப்பினும் அதுகுறித்து நடவடிக்கை இல்லை. இந்த டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்னைகள் தொடா்பாக, விரிவான கோரிக்கை மனுவை ஏப்ரல் 20 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் அளித்தேன். இந்த மனுவைப் பரிசீலனை செய்து டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணன், கிருஷ்ணன் ராமசாமி அமா்வு, மனு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பரிசீலனை செய்து 8 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com