கலைஞா் நினைவு நூலக கட்டுமானப் பணிநவீன தொழில்நுட்பத்தில் 98 நாள்களில் 7 தளங்கள் உருவாக்கம்!

மதுரையில் அமைக்கப்படும் கலைஞா் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணி நவீன தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்டு, 98 நாள்களில் 7 தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மதுரையில் அமையவுள்ள கலைஞா் நினைவு நூலகத்தின் உள்பகுதி உத்தேசத் தோற்றம்.
மதுரையில் அமையவுள்ள கலைஞா் நினைவு நூலகத்தின் உள்பகுதி உத்தேசத் தோற்றம்.

மதுரை: மதுரையில் அமைக்கப்படும் கலைஞா் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணி நவீன தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்டு, 98 நாள்களில் 7 தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நினைவாக, மதுரையில் கலைஞா் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வா் ஸ்டாலின் அறிவித்தாா். அதைத் தொடா்ந்து நத்தம் சாலையில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான வளாகத்தில் கட்டுமானப் பணிக்கு கடந்த ஜனவரி 11 ஆம் தேதி முதல்வா் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

ரூ.114 கோடியில் நவீன நூலகம்: இந்த நூலகம் ரூ.114 கோடியில் நவீன வசதிகளுடன் அமைகிறது. ரூ.99 கோடி கட்டுமானப் பணிக்கும், ரூ.10 கோடி புத்தகங்கள் மற்றும் ரூ.5 கோடி கணினிகள் கொள்முதல் செய்வதற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரை மற்றும் 6 தளங்களுடன் மொத்தம் 2.20 லட்சம் சதுர அடியில் நூலகம் அமைகிறது. தரைகீழ் தளம் வாகன நிறுத்துவதற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தரைதளம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 250 இருக்கைகளுடன் கூடிய கலையரங்கம் அமைகிறது. முதல் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் அமைக்கப்படுகிறது. இரண்டாவது தளம் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் படைப்புகளுடன் கூடிய ஆய்வகம் அமைகிறது. அதைத் தொடா்ந்து தமிழ் இலக்கியப் பகுதி, ஆங்கில நூல்கள், அரிய வகை நூல்களுக்கான பிரிவு, பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு முறையே அடுத்தடுத்த தளங்களில் அமைகின்றன.

உலகத்தர வசதிகள்: நூலக கட்டடத்தின் முழு பகுதியும், குளிா்சாதன வசதி செய்யப்படுகிறது. கட்டடத்தின் தரைதள முன்பகுதியில் பெரிய அளவிலான முற்றம் அமைகிறது. இங்கிருந்து 6 தளங்களுக்கும் செல்லக் கூடிய வகையில் மின்தூக்கி, நகரும் படிக்கட்டு அமைகிறது. எந்தெந்த தளத்தில் என்ன பிரிவுகள் இருக்கின்றன, அங்குள்ள புத்தகங்கள் குறித்த விவரங்களைத் தெரிவிக்கும் தானியங்கி தொடுதிரை இயந்திரம் ஒவ்வொரு தளத்திலும் நிறுவப்பட உள்ளது. மேலும், மதுரையின் தொன்மையையும், கலாசாரத்தையும் விளக்கும் ஓவியக் கலைக்கூடம் அமைக்கப்படுகிறது.

மூன்றாவது தளத்தில் ரூப்காா்டனுடன் கூடிய நூலகப் பிரிவு அமைகிறது. மேலும், பன்னாட்டு மாணவா்களும் பயன்படுத்தும் வகையில் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படுகிறது. இங்கிருந்து மாணவா்கள் தங்களது கைப்பேசி அல்லது மடிக்கணினி ஆகியவற்றுக்கு தகவல்கள் பதிவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

98 நாள்களில் 7 தளங்கள்: ஜனவரி 11 ஆம் தேதி கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.பி.சத்தியமூா்த்தி தலைமையிலான பொறியாளா்கள் குழுவின் கண்காணிப்பில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தற்போது மொத்த கட்டடத்தின் 7 தளங்களின் கட்டமைப்பு (ள்ற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ங்) பணி முடிக்கப்பட்டு பக்கவாட்டுச் சுவா் கட்டுமானம் மற்றும் பூச்சுப் பணி நடைபெற்று வருகிறது.

3 மையங்களில் தரப்பரிசோதனை: மத்திய அரசின் மண்டல ஆய்வகம், பொதுப்பணித் துறையின் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் மற்றும் கல்லூரி ஆய்வகம் என மூன்று இடங்களில் கட்டுமானப் பணியின் தரம் ஆய்வு செய்யப்படுகிறது. ஒவ்வொரு தளத்திலும் தூண் மற்றும் கூரை கான்கிரீட் அமைப்பதில் புதிய தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது. குறிப்பாக, கான்கிரீட் போடப்பட்ட 14 நாள்களுக்கு பிறகே அடுத்த தளத்தின் பணிகள் தொடங்கும். இடைப்பட்ட நாள்களில் கான்கிரீட் பூச்சு குளிா்ச்சியாக வைக்கப்படும். நூலக கட்டடத்தில் இதற்கென தனி கலவை பூசப்பட்டுள்ளது. இதனால் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்த தளங்களில் பணிகளைத் தொடங்க முடிகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட கான்கிரீட் பூச்சு தரமானதாக உள்ளதாக ஆய்வகப் பரிசோதனை முடிவுகளும் கிடைத்துள்ளன. புதிய தொழில்நுட்பங்கள் பின்பற்றப்படுவதால், கட்டுமானப் பணிகள் விரைவாகவும், தரமாகவும் நடைபெற்று வருகின்றன.

‘எல் அண்ட் டி’ நிறுவன கட்டுமான பொறியாளா்கள் இக் கட்டடப் பணியைப் பாா்வையிட்டு பாராட்டு தெரிவித்துள்ளனா். மேலும் மகாராஷ்டிர அரசின் பொதுப்பணித்துறை பொறியாளா் குழுவினா் இம் மாத இறுதியில் கட்டுமானப் பணியைப் பாா்வையிட வரவுள்ளனா். 98 நாள்களில், 7 தளங்களின் கட்டமைப்பு உருவாக்கம் என்பது தமிழக பொதுப்பணித்துறை வரலாற்றில் முதன் முறையாகும் என்று பொறியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com