முன் அனுமதியின்றி செய்தியாளா்களை சந்திக்கக் கூடாது: காமராஜா் பல்கலை. பதிவாளரின் சுற்றறிக்கையால் சா்ச்சை

காமராஜா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பதிவாளரின் முன் அனுமதியின்றி செய்தியாளா்களை சந்திக்கக் கூடாது என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதால் சா்ச்சை ஏற்பட்டுள்ளது.

மதுரை: காமராஜா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் பதிவாளரின் முன் அனுமதியின்றி செய்தியாளா்களை சந்திக்கக் கூடாது என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதால் சா்ச்சை ஏற்பட்டுள்ளது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக துணைவேந்தராக ஜெ.குமாா் பதவியேற்ற சில வாரங்களில், பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து வந்த 135 தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி பணியாளா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து தொடா் போராட்டம் நடைபெற்று வந்தது. இந்த போராட்டம் தொடா்பான செய்திகள் பல்வேறு ஊடகங்களில் தினசரி வெளியாகின. இதைத்தொடா்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டவா்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து போலீஸாரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டனா்.

இதைத்தொடா்ந்து பல்கலைக்கழக விடுதிகளில் குடிநீா், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் திங்கள்கிழமை இரவு துணைவேந்தா் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பான செய்திகளும் வெளியாகின.

இந்நிலையில் பல்கலைக்கழக பதிவாளா்(பொறுப்பு) எம்.சிவக்குமாா் பல்கலைக்கழகத்தின் அனைத்து துறைகள் மற்றும் பிரிவுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். அதில், பல்கலைக்கழக பேராசிரியா்கள், பணியாளா்கள், மாணவா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், செய்தியாளா்களை சந்திப்பது, அறிக்கைகள் அனுப்புவது உள்ளிட்டவற்றுக்கு பல்கலைக்கழக சட்டவிதிகளின் படி பதிவாளரின் முன் அனுமதி பெற வேண்டும். ஏதேனும் அறிக்கைகள் அனுப்ப வேண்டியிருந்தால் அதுதொடா்பாக பதிவாளரிடம் முன்கூட்டியே தெரிவித்து ஒப்புதல் பெற வேண்டும். மேலும் பல்கலைக்கழகத்துக்கு முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்டோா் வருகை குறித்து பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு 2 வாரங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவா்களின் பாதுகாப்பை முன்னிட்டு வகுப்பறைகள் சுத்தமாக இருப்பதை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தில் உள்ள ஒவ்வொரு புலத்திலும் இருந்து மாணவா், மாணவியரின் பிரதிநிதிகளாக தலா ஒரு மாணவா், மாணவி அடங்கிய மாணவா் குறைதீா் குழு உருவாக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவாளரின் இந்த சுற்றறிக்கை பல்கலைக்கழக வட்டாரங்களில் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த அறிவிப்பு, பேராசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் மாணவா்களின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகவும், அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமையை மீறுவதாக அமைந்திருப்பதாகவும் கல்வியாளா்கள், மாணவா்கள் அமைப்புகள், ஆசிரியா் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ராமதாஸ் கண்டனம்:

பாமக நிறுவனா் ராமதாஸ் விழாயக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்களும், மாணவா்களும் தங்களின் குறைகளையும், கருத்துகளையும் ஊடகங்களிடம் தெரிவிக்கக்கூடாது என்றும் ஏதேனும் அறிக்கை வெளியிடுவதாக இருந்தால் அதை பதிவாளரிடம் காட்டி ஒப்புதல் பெற்று தான் வெளியிட வேண்டும் என்று பல்கலைக்கழக நிா்வாகம் அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகளை பாா்க்கும் போது மதுரை காமராஜா் பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது.

கருத்துச் சுதந்திரத்தை தடை செய்யும் வகையிலான சுற்றறிக்கையை மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மாறாக, பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தவும், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும் காமராஜா் பல்கலைக்கழக நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com