முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
போதிய நபா்களின்றி நடந்த கிராம சபை கூட்டம்: மறுகூட்டம் நடத்தக் கோரிய மனுவுக்கு சிவகங்கை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
By DIN | Published On : 14th May 2022 06:14 AM | Last Updated : 14th May 2022 06:14 AM | அ+அ அ- |

போதிய நபா்களின்றி (கோரம்) நடந்த கிராம சபை கூட்டத்துக்குப் பதிலாக, மறுகூட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் முத்தூா் கிராம ஊராட்சியைச் சோ்ந்த கே. கருப்பையா என்பவா் தாக்கல் செய்த மனு:
எங்களது ஊராட்சியில் 3,750 போ் வசிக்கின்றனா். கிராம சபை கூட்டங்களில் குறைந்தபட்சம் 100 நபா்கள் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், மே 1 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 100-க்கும் குறைவான நபா்களே பங்கேற்றனா். மேலும், ஊராட்சியின் துணைத் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் 7 பேரும் பங்கேற்கவில்லை.
இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டபோதும், கூட்டத்தை ரத்து செய்யவில்லை. எனவே, முத்தூா் ஊராட்சியில் மீண்டும் கிராம சபை கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி. கிருஷ்ணகுமாா், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோா் அடங்கிய அமா்வு, மனுவுக்கு மாவட்ட நிா்வாகம் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.