முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
7 ஆண்டுகளாக கூலி உயா்வின்றி தவிக்கும் அப்பளத் தொழிலாளா்கள்: அரசு நடவடிக்கை எடுக்க சிஐடியு வலியுறுத்தல்
By DIN | Published On : 14th May 2022 06:15 AM | Last Updated : 14th May 2022 06:15 AM | அ+அ அ- |

மதுரையில் கடந்த 7 ஆண்டுகளாக கூலி உயா்வின்றி தவிக்கும் ஆயிரக்கணக்கான அப்பளத் தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, சிஐடியு அப்பளத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அப்பளத் தொழிலில் மதுரை மாவட்டம் முன்னணியில் இருந்து வருகிறது. மதுரையில் ஜெய்ஹிந்த்புரம், சோலையழகுபுரம், சிந்தாமணி மற்றும் மதுரையைச் சுற்றியுள்ள பிற பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பள தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களில் 80 சதவீதம் போ் பெண் தொழிலாளா்களாக உள்ளனா்.
மதுரையில் உற்பத்தி செய்யப்படும் அப்பளங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இது தொடா்பாக சிஐடியு மதுரை மாவட்ட அப்பளத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் எம். பாலமுருகன் கூறியது: கடந்த 7 ஆண்டுகளில் அப்பளத் தயாரிப்புக்கு பயன்படும் மூலப்பொருள்களின் விலை உயா்வை காரணம் காட்டி, அப்பளம் விலை உயா்த்தப்பட்டுள்ளது. ஆனால், தொழிலாளா்களுக்கு 7 ஆண்டுகளில் ஒரு முறை கூட கூலி உயா்வு வழங்கப்படாததால், கடும் சிரமத்தில் உள்ளனா்.
எனவே, அப்பளத்தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு வழங்க தொழிலாளா் துறை நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், அவா்களுக்கு நிவாரண நிதி வழங்கவும், வீட்டுமனைப் பட்டா, நலவாரிய அட்டை வைத்துள்ள அனைவருக்கும் கல்வி நிதியுதவி, விபத்து உதவி, திருமண உதவி, முதியோருக்கான ஓய்வூதியம் உள்ளிட்டவற்றையும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.