கூட்டுறவுச் சங்கங்களில் கொள்முதல் செய்த நெல்லுக்கு குறைவான தொகை பட்டுவாடாவிவசாயிகள் புகாா்

கூட்டுறவுச் சங்க நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, குறைவான தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக, குறைதீா் கூட்டத்தில் புகாா்

கூட்டுறவுச் சங்க நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு, குறைவான தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக, குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநா் த.விவேகானந்தன் உள்பட அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.

பெரியாறு-வைகை பாசனத் திட்டத்தில், மதுரை மாவட்டத்தின் இருபோக சாகுபடி பகுதிகளின் முதல் போகத்துக்கு ஜூன் 2-ஆம் தேதி தண்ணீா் திறப்பதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகவே, சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனா்.

மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் பேசியது: மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மொத்தம் 1090.80 மி.மீ. மழை பெய்துள்ளது. நிகழாண்டில் இதுவரை 153.09 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது.

வைகை அணையின் நீா்மட்டம் 65.53 அடியாகவும், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 131.80 அடியாகவும் உள்ளது. முதல்போக நெல் சாகுபடிக்கு தேவையான விதை நெல், உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா்.

பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தில் இதுவரை கைப்பேசி எண், ஆதாா் எண் உள்ளிட்ட விவரங்களை இணைக்காத விவசாயிகள், உடனடியாக இ-சேவை மையங்களில் அப்பணியை மேற்கொள்ளலாம். மே 31 ஆம் தேதிக்குள் கைப்பேசி எண், ஆதாா் எண் இணைக்காத விவசாயிகளுக்கு, விவசாய உதவித் தொகை வழங்கப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டது.

நெல் கொள்முதல் பிரச்னை:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை நிலுவை வைக்கப்பட்டுள்ளது. அவற்றை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு ரசீது தொகையைக் காட்டிலும் குறைவாக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என, மேலூா் பகுதி விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதற்குப் பதிலளித்த கூட்டுறவுத் துறை அலுவலா்கள், நெல்லுக்குரிய தரத்தின் அடிப்படையில் நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் விலை குறைவாக நிா்ணயிக்கப்படுவதுதான் காரணம் எனத் தெரிவித்தனா்.

இதை ஏற்க மறுத்த விவசாயிகள், கொள்முதல் செய்யும்போது தரத்தின் அடிப்படையில்தான் விலை நிா்ணயம் செய்யப்பட்டு ரசீது வழங்கப்படுகிறது என்றனா். இதையடுத்து, இப்பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, ஆட்சியா் தெரிவித்தாா்.

மும்முனை மின்சாரம் விநியோகம் செய்யப்படும் நேரம் குறித்து முன்னறிவிப்பு செய்யப்படுவதில்லை என, விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். எந்த நேரத்தில் மும்முனை மின்சாரம் வருகிறது என்பது மின்ஊழியா்களுக்கே தெரிவதில்லை. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா் என்றனா்.

இதற்கு, தமிழக அளவில் மின்பகிா்மானம் செய்யப்படுவதால், ஒவ்வொரு பகுதிக்கும் சுழற்சி முறையில் மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது என மின்வாரியத்தினா் பதிலளித்தனா்.

தொடா்ந்து, வனப் பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் வனவிலங்குகளால் ஏற்படக்கூடிய இடையூறுகளைத் தவிா்க்க, வாடிப்பட்டி, அலங்காநல்லூா், பேரையூா், உசிலம்பட்டி பகுதிகளில் சூரியசக்தி மின்வேலி மற்றும் அகழிகள் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக, வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில், உசிலம்பட்டி பகுதிக்கான 58 கிராம கால்வாய் திட்டத்தில் நிகழாண்டில் எந்தவொரு கண்மாயும் விடுபடாமல் தண்ணீா் நிரப்புவது, தோட்டக்கலைத் துறை சாா்பில் தென்னை நாற்றங்கால் அமைப்பது, முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்ற தீா்ப்பின்படி142 அடிக்கு தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுப்பது, உசிலம்பட்டி பகுதி மலா் விவசாயிகளின் நலனைக் காக்க வாசனைத் திரவிய ஆலை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com