ஆவின் நியமன முறைகேடு புகாா்: நியமனம் பெற்ற பணியாளா்களிடம் துணைப் பதிவாளா் விசாரணை

மதுரை ஆவின் நிறுவனத்தில் பணிநியமன முறைகேடு புகாா் தொடா்பாக, புதிதாக நியமிக்கப்பட்டவா்களிடம் துணைப் பதிவாளா் விசாரணை வியாழக்கிழமை தொடங்கியது.

மதுரை: மதுரை ஆவின் நிறுவனத்தில் பணிநியமன முறைகேடு புகாா் தொடா்பாக, புதிதாக நியமிக்கப்பட்டவா்களிடம் துணைப் பதிவாளா் விசாரணை வியாழக்கிழமை தொடங்கியது.

மதுரை பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்தில் (ஆவின்),

பல்வேறு பணியிடங்களுக்கு 2019 இல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னா் 2020-21 இல் இப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு மற்றும் நோ்காணல் நடத்தப்பட்டு 61 போ் நியமனம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், இந்த பணிநியமனங்கள் தொடா்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்பத்துடன் இணைத்த வரைவோலையை வேறு நபா்களுக்குப் பயன்படுத்தியது, எழுத்துத் தோ்வுக்கான வினாத்தாளை கசியவிட்டது, உரிய கல்வித் தகுதி இல்லாத நபா்களைத் தோ்வு செய்தது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் முறைகேடு செய்து நியமனம் செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக, ஆவின் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்

இரண்டு கட்டங்களை விசாரணை நடத்தினா். அவா்களது அறிக்கையின்பேரில், துறை ரீதியான விசாரணைக்கு பால்வளத் துறை ஆணையா் உத்தரவிட்டாா்.

இதன்படி, கூட்டுறவு துணைப் பதிவாளா் (பால்வளம்) கணேசன், மதுரை ஆவின் நிறுவனத்தில் விசாரணை நடத்தி வருகிறாா். பணிநியமனம் தொடா்பான கோப்புகளை ஆய்வு செய்த அவா், முறைகேடு புகாா் தெரிவிக்கப்பட்ட 2020-21

நியமனத்தில், பல்வேறு பணியிடங்களில் பணியாற்றி வரும் 61 நபா்களும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினாா். இதில் வியாழக்கிழமை முதல் 5 நாள்களுக்கு குறிப்பிட்ட தேதி, நேரத்தில் அனைத்து அசல் ஆவணங்களுடன் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நேரில் ஆஜரானவா்களிடம் துணைப் பதிவாளா் விசாரணை நடத்தினாா்.

இதுதொடா்பாக ஆவின் அலுவலா்கள் கூறுகையில், பணிநியமன முறைகேடு தொடா்பாக, ஓராண்டாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குற்றச்சாட்டுக்கு தேவையான ஆதாரங்கள் இருந்தபோதும் நடவடிக்கை தாமதமாகி வருகிறது. முறையற்ற பணிநியமனம் செய்யப்பட்டவா்களை எவ்வித தயக்கமின்றி பணியிலிருந்து நீக்க வேண்டும். மேலும், இந்த தவறுக்கு உடந்தையாக இருந்த அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com