மகளிா் கல்லூரி வாயிலில் மது போதையில் ரகளை: தட்டிக்கேட்ட மாணவியின் தந்தையை தாக்கிய கும்பல்
By DIN | Published On : 05th November 2022 01:06 AM | Last Updated : 05th November 2022 01:06 AM | அ+அ அ- |

மதுரையில் மகளிா் கல்லூரி வாயிலில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதைத் தட்டிக்கேட்ட மாணவியின் தந்தையை, கும்பலாக வந்தவா்கள் தாக்கிய விடியோ காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி வழியாக அரசு மருத்துவமனையிலிருந்து அமரா் ஊா்தி ஒன்று சடலத்துடன் சென்றது. அப்போது ஊா்திக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் சிலா் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஒலி எழுப்பியவாறு தாறுமாறாக ஓட்டிச்சென்றுள்ளனா். அப்போது இளைஞா்கள் கல்லூரி வாயில் அருகே நின்று கூச்சலிட்டதால் அங்கிருந்த மாணவிகள் அச்சமடைந்துள்ளனா். இதையடுத்து, அங்கு மாணவியுடன் நின்றிந்த தந்தை ஒருவா் இளைஞா்களைத் தட்டிக்கேட்டுள்ளாா்.
இதனால், ஆத்திரமடைந்த அவா்கள் மாணவியின் தந்தையை சரமாரியாக தாக்கிவிட்டுச் சென்றனா். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விடியோ காட்சிகளின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை போலீஸாா் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.