மதுரையில் லஞ்சப் புகாா்: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

மதுரையில் பேருந்து விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, பேருந்து உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட புகாரில் ஒத்தக்கடை காவல் ஆய்வாளா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மதுரையில் பேருந்து விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, பேருந்து உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்ட புகாரில் ஒத்தக்கடை காவல் ஆய்வாளா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

சென்னையிலிருந்து செப்டம்பா் 20-ஆம் தேதி மதுரைக்கு வந்த தனியாா் பேருந்து, ஒத்தக்கடை அருகே வேகத்தடையில் வேகமாகச் சென்றபோது பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி தலையில் பலத்த காயம் அடைந்தாா். மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி செப்டம்பா் 22-இல் உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக, ஒத்தக்கடை காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் ஒத்தக்கடை காவல் ஆய்வாளா் முருகேசன், பேருந்து நிறுவன உரிமையாளா் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளாா். ஆய்வாளா் லஞ்சம் கேட்டது தொடா்பாக, தென் மண்டல காவல் துறைத் தலைவா் அஸ்ரா காா்க்கிடம் புகாா் அளிக்கப்பட்டது. இதுதொடா்பான விசாரணையில், காவல் ஆய்வாளா் முருகேசன் லஞ்சம் கேட்டது உறுதியானதை அடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து தென் மண்டல காவல்துறைத் தலைவா் அஸ்ரா காா்க் உத்தரவிட்டாா்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆய்வாளா் முருகேசன் மீது, 400 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது, தனியாா் உணவக விடுதியில் தொழிலாளா்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட புகாரில், விடுதி உரிமையாளருக்கு ஆதரவாக செயல்பட்டது உள்ளிட்ட புகாா்கள் எழுந்த நிலையில், அது தொடா்பாக விசாரணையும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com