ஆதீன சொத்துகளை தனியாருக்கு ஒத்திக்கு அளிக்க முடியாது: உயா்நீதிமன்றம்
By DIN | Published On : 19th October 2022 03:12 AM | Last Updated : 19th October 2022 03:12 AM | அ+அ அ- |

மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான சொத்துகளை ஒத்திக்கு அளிக்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
சேலத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:
மதுரை ஆதீன மடத்திற்குச் சொந்தமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துகள் உள்ளன. கடந்த 2008-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில் உள்ள 1,191 ஏக்கா் நிலங்களை அப்போதைய ஆதீனகா்த்தா், புதுச்சேரியைச் சோ்ந்த தனியாா் நிறுவனங்களுக்கு 99 ஆண்டுகளுக்கு, ஒத்திக்கு உரிமை ஆவணம் அளித்தாா். அந்த ஒப்பந்தத்தின்படி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. ஆகவே, அந்த ஒப்பந்தத்தையும், அதன் அடிப்படையிலான பத்திரப் பதிவையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோா் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஆதீனத்திற்குச் சொந்தமான சொத்துகளை ஒத்திக்கு அளிப்பதற்கு சட்டப்படி அனுமதியில்லை. ஆதீன மடங்கள் அனைத்துமே, இந்து சமய அறநிலையத் துறைக்குக் கட்டுப்பட்டவை. இத்தகைய செயல்களில் ஆதீன மடங்கள் செயல்படும்போது, நடவடிக்கை எடுப்பதற்கு அறநிலையத் துறைக்கு அதிகாரம் இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை’ எனக் கேள்வி எழுப்பினா்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் குழு அமைத்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேற்படி நிலங்களிலிருந்து சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டு வந்தால், உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அக்.28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.