மதுரை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் பெண் அதிகாரியை ஏமாற்ற முயற்சி: சென்னை விமான நிலைய ஒப்பந்த ஊழியா் கைது
By DIN | Published On : 19th October 2022 03:29 AM | Last Updated : 19th October 2022 03:29 AM | அ+அ அ- |

மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் பெண் அதிகாரியை ஏமாற்ற முயன்ற சென்னை விமான நிலையத்தின் ஒப்பந்த ஊழியரை தல்லாகுளம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை அழகா்கோயில் சாலையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்கு திங்கள்கிழமை பிற்பகல் வந்த நபா் ஒருவா், அங்கு பணியிலிருந்த காவல் ஆய்வாளா் சூரியகலாவிடம், தான் லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை தலைமை அலுவலகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருவதாக அறிமுகமானாா். அவரிடம் அடையாள அட்டை கேட்டபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாா்.
எனவே, சந்தேகமடைந்த போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தினா்.
இதில், மதுரை மாவட்டம், எம்.கல்லுப்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் (45) என்பது தெரியவந்தது. மேலும், தற்போது சென்னை பழவந்தங்கலில் தங்கியுள்ள இவா், சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் சூரியகலா கொடுத்த புகாரின் பேரில் முத்துக்கிருஷ்ணனை தல்லாகுளம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இதுபற்றி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தரப்பில் கூறியதாவது : பேரையூா் அருகே சிலைமலைப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் முத்துக்காளைக்கும், கைது செய்யப்பட்டுள்ள முத்துக்கிருஷ்ணனுக்கும் சில மாதத்துக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
அப்போது, முத்துக்கிருஷ்ணன் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி வருவதாகவும், மதுரை லஞ்ச ஒழிப்புத் துறையில் நிலுவையில் உள்ள முத்துக்காளையின் வழக்கை முடித்து தருவதாகவும் அவரிடம் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக, இருவரும் மதுரையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்துக்கு வந்த போது, முத்துக்கிருஷ்ணன் போலீஸாரை ஏமாற்ற முற்பட்டதால் கைது செய்யப்பட்டுள்ளாா் என்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G