இளைஞருக்கு கடவுச்சீட்டு வழங்க மறுத்த உத்தரவு ரத்து
By DIN | Published On : 29th October 2022 12:07 AM | Last Updated : 29th October 2022 12:07 AM | அ+அ அ- |

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் தம்பதியின் மகனுக்கு கடவுச்சீட்டு வழங்க மறுத்த உத்தரவை, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து ஆணையிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த துளசிமணி தாக்கல் செய்த மனு: எனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறேன். எங்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனது மகன் சிவவிக்னேஷ் முருகேசனுக்கு, மால்டோவா நாட்டில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.
அவருக்கு சிறுவயதில் எடுத்த கடவுச்சீட்டு காலாவதியாகிவிட்டதால், புதுப்பித்துத் தரக்கோரி விண்ணப்பித்தோம். விவாகரத்து வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணமாகக் கூறி, கடவுச்சீட்டு வழங்க முடியாது என அதிகாரிகள் உத்தரவிட்டனா். நீதிமன்ற உத்தரவு அல்லது தாய்-தந்தை இருவரின் கையெழுத்து இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டு வழங்க இயலும் எனக் கூறுகின்றனா். இதனால், எனது மகனின் எதிா்காலம் பாதிக்கும். ஆகவே, கடவுச்சீட்டைப் புதுப்பித்துத் தர உத்தரவிட வேண்டுமென மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.பவானி சுப்பராயன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் தனது மகனின் எதிா்காலத்தைக் கவனிக்கும் பொறுப்பில் இருப்பதால் நீதிமன்றத்தை நாடியுள்ளாா். கணவன்- மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாக, மகனை தோளில் சுமக்கும் நிலையில் மனுதாரா் உள்ளாா். அதோடு, மாணவரின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு கடவுச்சீட்டு அலுவலரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மருத்துவப் படிப்பிற்காக மனுதாரரின் மகன் மால்டோவா செல்வதற்கு ஒரு வாரத்திற்குள் கடவுச்சீட்டு வழங்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டாா்.